HRCE issues new notice on Chidambaram temple inspection: சிதம்பரம் நடராஜர் கோயிலில் திட்டமிட்டப்படி ஆய்வு நடைபெறாத நிலையில், கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் விசாரணைக் குழுவிடம் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள வழங்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாக பணிகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்ய, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த கோயிலின் வரவு-செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் கடந்த 7 மற்றும் 8-ம் தேதிகளில் ஆய்வு செய்தனர்.
ஆனால் ஆய்வின் போது, கோயிலின் வரவு செலவு கணக்குகள் மற்றும் சொத்துக்கள் குறித்த விவரங்களை பொது தீட்சிதர்கள் ஆய்வுக் குழுவிடம் வழங்க மறுத்துவிட்டனர்.
இதையும் படியுங்கள்: விபத்து குறித்து விசாரணையில் இருந்த 2 காவலர்கள் வேன் மோதி பலி
இதனால், திட்டமிட்டபடி ஆய்வு நடைபெறவில்லை என இந்து சமய அறநிலையத் துறை ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆய்வு சம்மந்தமான அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சமர்பிக்க இருப்பதாகவும் அதன் பின் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஆய்வுக்கு வந்த விசாரணை குழுவினர் தெரிவித்தனர்.
இதன்படி, இந்த ஆய்வு குறித்த அறிக்கையை ஆய்வு குழு நாளை அறநிலையத்துறை ஆணையரிடம் சமர்பிக்க இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை விசாரணைக் குழுவிடம் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலூர் மாவட்டம் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில் குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு, இந்து சமய அறநிலைய அறக்கொடைகள் சட்டத்தின் சட்டப்பிரிவு 23 மற்றும் 33 இன் படி, ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் திருக்கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வருகின்ற 20-06-2022 மற்றும் 21-06-2022 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை, துணை ஆணையர்/ ஒருங்கிணைப்பாளர், விசாரணைக்குழு, இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, எண்,8, ஆற்றங்கரைத் தெரு, புதுப்பாளையம், கடலூர் என்ற முகவரிக்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.