சென்னை: கேசினோ சூதாட்ட புகாரால் எழுந்த எதிர்ப்பால் புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அனுமதி இல்லாததால் கடலிலேயே நின்று விட்டு சென்னைக்கு புறப்பட்ட சூழலில் மீண்டும் கப்பல் இன்று புதுச்சேரி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அனுமதி இல்லாததால் இக்கப்பல் புறப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடல் வழி மார்க்கமாக சென்னை-விசாகப்பட்டினம்- புதுச்சேரி இடையே இயங்கும், தனியார் சொகுசு கப்பலை தொடங்கி வைத்துள்ளார். இந்தக் கப்பல் சம்பந்தமான பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சென்னையிலிருந்து கிளம்பும் கப்பல் புதுச்சேரி உப்பளம் துறைமுகத்துக்கும் வந்து புதுச்சேரியில் பயணிகளை ஏற்றி, இறக்கவும் திட்டமிட்டனர். புதுச்சேரியிலிருந்து சென்னைக்கும் இக்கப்பல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு ஆளும் அரசின் கூட்டணிக்கட்சியான அதிமுக உட்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கப்பலில் கேசினோ சூதாட்டங்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கலாச்சார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுச்சேரி அரசு அனுமதிக்காது என்று ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னையிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் சென்று விட்டு புதுச்சேரிக்கு இக்கப்பல் அண்மையில் வந்தது. ஆனால் அரசு அனுமதி இல்லை என்பதால் திரும்பியது. இன்று புதுச்சேரி கடற்கரையில் இருந்து பார்த்தபோது தனியார் சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. இதனால் உப்பளம் துறைமுகத்துக்கு கப்பல் வந்து பயணிகள் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதுச்சேரி கடலில் இருந்து ஆறு நாட்டிக்கல் மைல் தொலைவில் நின்றிருந்தது. பின்னர் இக்கப்பல் புறப்பட்டுச் சென்றது.
புதுச்சேரி அரசு அனுமதி தரவில்லை: இதுபற்றி அரசு அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ”புதுச்சேரிக்கு தமிழகத்திலிருந்து 2 சொகுசு கப்பல்கள் வர அனுமதி கோரியிருந்தனர். ஒரு கப்பல் சென்னையிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் சென்று அங்கிருந்து புதுச்சேரி வழியாக சென்னை திரும்பும் வகையில் ஐந்து நாள் பயணம் ஏற்பாடு செய்திருந்தனர். அக்கப்பல் அண்மையில் வந்து அனுமதி இல்லாததால் புதுச்சேரியில் இருக்காமல் திரும்பியது. இந்நிலையில் இரண்டாவதாக இரண்டு நாள் பயண கப்பல் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்தது. இந்தக் கப்பலுக்கும் புதுச்சேரி அரசு அனுமதி தரவில்லை, அதனால் அதுவும் புறப்பட்டுச் சென்று விட்டது” என்றனர்.