திருமலை: திருப்பதியில் கூட்டம் அதிகரித்துள்ளதால் 30 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வார விடுமுறையான சனி, ஞாயிறுக்கிழமைகளில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் மாலை வைகுண்டம் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பியது. இதனால், தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான கூடம் வரை 4 கிலோ மீட்டருக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கூட்டத்தில் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து, நேற்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அன்னப்பிரசாதம், குடிநீர் வழங்குவதை ஆய்வு செய்தார். அப்போது, உணவின் தரம் மற்றும் சுவை குறித்து சாப்பிட்டு பக்தர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:வழக்கமாக வைகுண்ட ஏகாதேசி மற்றும் பிரமோற்சவத்தில் கருட சேவையன்று இருப்பதை போன்று எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது. வரிசையில் வரக்கூடிய பக்தர்கள் 30 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் மற்றும் விஐபி டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாரந்திர சேவைகளான திங்கட்கிழமை நடைபெறும் விசேஷ பூஜை, செவ்வாய்கிழமை நடைபெறும் சகஸ்ரதீப அலங்கார சேவை, வியாழக்கிழமை நடைபெறும் திருபாவடா சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்நேரத்தில் கூடுதலாக இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் திங்கட்கிழமை(இன்று) முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாலும், 2வது சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. எனவே, தேவஸ்தானத்திற்கு ஒத்துழைப்பு அளித்து பொறுமையாக காத்திருந்து தரிசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.87,698 பேர் தரிசனம்திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 87,698 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் 48,804 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு எண்ணப்பட்டது. இதில் 3.88 கோடி காணிக்கையாக கிடைத்தது.