சென்னை: தமிழக அரசுத் துறைகளில் உள்ளகாலி பணியிடங்கள் தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சி தலைவராக 2020-ல் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். இவர் கடந்த ஜூன் 9-ம் தேதி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தற்காலிக அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினரான ஐஏஎஸ் அதிகாரிசி.முனியநாதன், தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே நாகை மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் நலம் மற்றும் தொழிலாளர் நலத் துறையில் ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தேர்வாணையத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும்வரை, முனியநாதன் பொறுப்பு தலைவராக இருப்பார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.