புதுடெல்லி: போரால் உக்ரைனில் பாதியில் படிப்பை விட்டு வெளியேறிய இந்திய மாணவர்கள், முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல் ரஷ்யா பல்கலைக் கழகங்களில் தொடரலாம் என்று ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரால் உக்ரைன் பல்கலைக் கழகங்களில் படித்து வந்த இந்திய மாணவர்கள் 20,000 பேர் நாடு திரும்பினர். இதனால், அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இந்நிலையில், உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்கள் ரஷ்ய பல்கலைக் கழகங்களில் தங்களது படிப்பை தொடங்கலாம் என்று அந்நாட்டு தூதர் தெரிவித்துள்ளார். இது குறித்து, ரஷ்ய கூட்டமைப்பின் கவுரவ தூதரும், திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்ய மாளிகையின் இயக்குநருமான ரதீஷ் சி நாயர் கூறுகையில், ‘ரஷ்யா-உக்ரைன் போரால் படிப்பை பாதியில் விட்டு வெளியேறிய இந்திய மாணவர்களுக்கு, அவர்களின் முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல், ரஷ்ய பல்கலைக் கழகங்களில் சேர்க்கை வழங்கப்படும். மாணவர்கள் உதவித்தொகை பெற்ற சந்தர்ப்பங்களில், ரஷ்ய பல்கலைக் கழகங்களிலும் இது ஏற்றுக் கொள்ளப்படலாம். இருப்பினும், உக்ரைனில் செலுத்தப்படும் கட்டணம் ரஷ்யாவில் போதுமானதாக இருக்காது,’ என்று தெரிவித்தார். போரை நிறுத்த அமெரிக்கா விரும்பவில்லைரஷ்ய தூதர் மேலும் கூறுகையில், ‘உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் பாதுகாப்பு நிறுவனங்கள் பயன் பெறுவதால், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் போர் முடிவுக்கு வருவதை விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.