கொழும்பு : பெட்ரோல், டீசலுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த மாதத்தில் இருந்து, வாரத்துக்கு குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் இவற்றை விற்கும் நடைமுறையை அமல்படுத்த, நம் அண்டை நாடான இலங்கை முடிவு செய்துள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தட்டுப்பாடு
இதனால் மின்சார உற் பத்தி நிறுத்தப்பட்டு, மின் வினியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.கடந்த பிப்ரவரியில் இருந்து இந்த நிலை நீடித்து வருகிறது. மின்சார தட்டுப்பாடு உள்ளதால், வீடுகள் மற்றும் அலுவலகங்களின் எரிபொருள் தேவைக்கு பெட்ரோல், டீசலை வாங்கி குவிக்கின்றனர். இதனால், பெட்ரோல் ‘பங்க்’குகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில், இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா நேற்று கூறியதாவது:மின்சார வினியோகத்தை சீரமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதிக அளவில் பெட்ரோல், டீசலை மக்கள் வாங்கி பதுக்கி வைக்கின்றனர். இதனால் இவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.நாடு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்களுக்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நிலைமை சீரடையும் வகையில் பெட்ரோல், டீசல், வாராந்திர ‘கோட்டா’ முறையில் வழங்கப்படும். அடுத்த மாதம் முதல் இது அமலுக்கு வரும்.அதன்படி, பெட்ரோல் பங்க்குகளில் முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் பெட்ரோல், டீசல் வினியோகிக்கப்படும்.கடன் அடிப்படையில் இந்தியா வழங்க உள்ள பெட்ரோல், டீசல், இம்மாதம் 22ம் தேதி வந்து சேரும். அதனால் நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கியத்துவம்
இதற்கிடையே, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியதாவது:பொருளாதார நெருக்கடி யால் நாடு முழுதும் எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க, மற்ற ஆதாரங்களை ஆய்வு செய்தோம். ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை வாங்குவதற்கு இப்போது தயாராகி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், ரஷ்யாவிட மிருந்து எரிபொருள் வாங்குவதை கைவிட்டு உள்ளன. இந்நிலையில் இலங்கை பிரதமரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Advertisement