சென்னை: தமிழகத்தில் 8 மக்களவைத் தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை பாஜக தொடங்கியுள்ளது. வெற்றி வாய்ப்புள்ள இதர தொகுதிகளை கண்டறியும்பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருந்தது. இந்தத் தேர்தலில், பாஜக ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும்அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக, கோவை தெற்கு, நாகர்கோவில், மொடக்குறிச்சி, திருநெல்வேலி ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, அண்மையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, கணிசமான வாக்குகளை பெற்றது.
இந்தச் சூழலில், வரும் 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. அதற்கான பணிகளையும் தமிழக பாஜக தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் 8 மக்களவைத் தொகுதிகளை தேர்வு செய்து, அங்கு தற்போதே தேர்தல் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் ஆதரவு அதிகரிப்பு
இதுதொடர்பாக, பாஜக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் பலஇடங்களில் கணிசமான வாக்குகளை பெற்றதால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர். அத்துடன், தற்போது மக்களிடையே பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை கட்சி நிர்வாகிகள் ஆர்வமுடன் தொடங்கியுள்ளனர். பாஜக தேசியத் தலைமையும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்கி தேர்தல் பணிகளை தொடங்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில், தமிழகத்தில் தென்சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், கோவை ஆகிய 8 தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். இந்த தொகுதிகளைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், ஏற்கெனவே தேர்தல் பணியாற்றியவர்கள், அந்த தொகுதிகளிலேயே வசிப்பவர்கள் ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளோம்.
அவர்கள் கட்சியின் கட்டமைப்புகளை பலப்படுத்துவது, வீடு வீடாகச் சென்று மத்திய அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பது, மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண போராட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட உள்ளனர். எட்டு தொகுதிகள் என்பது முதல்கட்ட பட்டியல்தான்.
இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த பட்டியல்களை தயாரிக்க உள்ளோம். அதற்காக, ஏற்கெனவே வெற்றி பெற்றதொகுதிகள், வெற்றிக்கு நெருக்கமாக வந்து தோல்வியடைந்த தொகுதிகள் என பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறியும் பணியிலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.