IND v SA: புவியின் மாஸான பௌலிங்கைத் தாண்டியும் வென்ற தென்னாப்பிரிக்கா; மீண்டும் சொதப்பிய இந்தியா!

முதல் டி20 போட்டி டெல்லியில் நடந்திருந்தது. இரண்டாவது போட்டி இப்போது கட்டாக்கில் நடந்து முடிந்திருக்கிறது. இதைத் தவிர இந்த இரண்டு போட்டிகளுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. டாஸ் தோல்வி. முதலில் பேட்டிங். சுமாரான பௌலிங். ஸ்கோரை டிஃபண்ட் செய்ய முடியாமல் தடுமாற்றம். முதல் போட்டியில் நடந்த எல்லாம் அப்படியே மீண்டும் நடக்கும்போது ரிசல்ட் மட்டும் மாறுமா என்ன? அதே ரிசல்ட்தான். இந்தியா மீண்டும் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றிருக்கிறது!

Pant – Bavuma

தென்னாப்பிரிக்க கேப்டனான பவுமாவே டாஸை வென்றிருந்தார். கடந்த போட்டியில் 200+ சேஸிங்கை வெற்றிகரமாக முடித்திருப்பதால் துணிச்சலாக சேஸிங்கை தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்க அணியில் டீகாக் இல்லை. அவருக்குப் பதிலாக ஹென்றி க்ளாசென் சேர்க்கப்பட்டிருந்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. முதல் போட்டியில் இறங்கிய அதே ப்ளேயிங் லெவன்தான் இங்கேயும்.

ருத்துராஜ் கெய்க்வாட்டும் இஷன் கிஷனும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். ரபாடா வீசிய முதல் ஓவரிலேயே ருத்துராஜ் விக்கெட்டை பறிகொடுத்திருந்தார். ஷார்ட்டாக வீசி செட் செய்துவிட்டு கொஞ்சம் ஃபுல்லாக வீசவே Front Foot இல் ஷாட் ஆட முயன்று சரியாக ஆடாமல் பாயின்ட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார். முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்திருந்தாலும் பவர்ப்ளேயின் மற்ற ஓவர்களில் மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் ஓரளவு நன்றாகவே ஆடியிருந்தனர். ஸ்ரேயாஸூடன் கூட்டணி போட்டு இஷன் கிஷன் கொஞ்சம் அதிரடியாகவே ஆடினார். பர்னல், நார்க்கியா, ப்ரெட்டோரியஸ் ஆகியோர் ஷார்ட் பால்களாகத் தொடர்ந்து வீச அவற்றை லெக் சைடில் கச்சிதமாக மடக்கி அடித்து பவுண்டரியும் சிக்சருமாக இஷன் கிஷன் வெளுத்தெடுத்தார். ஆனால், தென்னாப்பிரிக்க பௌலர்கள் இதிலும் ஒரு ட்விஸ்ட்டை வைத்திருந்தனர். ரன்கள் போனாலும் பரவாயில்லை, இஷன் கிஷனை ஷார்ட் பால்களை ஆட வைத்து அவரின் விக்கெட்டை அள்ளிவிட வேண்டும் என்பதே அவர்களின் திட்டமாக இருந்தது. அதன்படியே, 34 ரன்களில் நார்க்கியா வீசிய ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியிலேயே விக்கெட்டை பறிகொடுத்து இஷன் கிஷன் வெளியேறினார்.

Ishan Kishan

இஷன் கிஷன் 7 வது ஓவரில் அவுட் ஆனார். அதன்பிறகு, 17 வது ஓவர் வரைக்குமே இந்திய அணி அவ்வளவு சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கவில்லை. வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தன. விளைவாக ஸ்கோரும் மந்தமாகவே உயர்ந்தது. இடதுகை ஸ்பின்னர்களைக் கண்டால் கட்டுப்பாடற்று பேட்டை வீச முற்படும் ரிஷப் பண்ட் இங்கேயும் அதையே செய்தார். கேசவ் மகாராஜா வீசிய முதல் பந்தையே இறங்கி வந்து அட்டாக் செய்ய முயல பவுண்டரி லைனில் கேட்ச் ஆகியிருந்தார். சீரற்ற பவுன்ஸை வெளிப்படுத்திய பிட்ச்சை பயன்படுத்தி பர்னல் ஹர்திக்கை போல்டாக்கி வெளியேற்றினார். நீண்ட நேரமாக நின்று 114 ஸ்ட்ரைக் ரேட்டில் 40 ரன்களை எடுத்த ஸ்ரேயாஸூம் பெரிதாக ஒன்றும் செய்யாமல் ப்ரெட்டோரியஸின் பந்தில் வெளியேறினார். இந்திய அணி கொஞ்சம் பரிதாப நிலைக்குச் சென்றது. டெத் ஓவரில் தினேஷ் கார்த்திக் காப்பாற்றுவார் என நினைக்க, அவருமே கொஞ்சம் தடுமாறித்தான் போயிருந்தார். 16 பந்துகளில் வெறும் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இருந்தாலும் கடைசி இரண்டு ஓவர்களில் இரண்டு பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடித்து ஓரளவுக்குச் சமாளித்துவிட்டார். இந்திய அணி எடுத்த ஸ்கோர் 148.

149 ரன்களெல்லாம் பெரிய விஷயமே இல்லையென்றாலும், தென்னாப்பிரிக்காவின் தொடக்கமும் கொஞ்சம் சலசலப்பாகவே இருந்தது. பவர்ப்ளேக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்தார்கள்.

Bhuvaneswar Kumar

அந்த மூன்று விக்கெட்டுகளையுமே புவனேஷ்வர் குமாரே வீழ்த்தியிருந்தார். கடந்த போட்டியில் சொதப்பியதற்கும் சேர்த்து வைத்து இங்கே பந்தை பயங்கரமாகத் திருப்பிவிட்டார்.

இரண்டு ஸ்லிப்பை வைத்துக் கொண்டு ஒரே குட் லெந்த்தை பிடித்துக் கொண்டு உள்ளேயும் வெளியேயும் திருப்பி ரிஷா ஹென்றிக்ஸ், ப்ரெட்டோரியஸ், வாண்டர்-டஸன் என மூவரையும் வீழ்த்தினார். பவர்ப்ளே முடிவில் தென்னாப்பிரிக்கா 29-3 என்ற நிலையில் இருந்தது. போட்டி இந்தியா பக்கமாக சாய்வதை போல இருந்தது. ஆனால், ஒன்றிரண்டு ஓவர்களுக்குத்தான் இந்த நிலை நீடித்தது.

கேப்டன் பவுமாவும் ஹென்றி க்ளாசெனும் நல்ல கூட்டணி அமைத்து கொஞ்ச நேரத்திற்கு விக்கெட்டே விடாமல் 64 ரன்களைச் சேர்த்தனர். இந்தக் கூட்டணி ஆட்டத்தை அப்படியே மாற்றியது.

Klasen

நின்று நிதானமாக ஆடிய பவுமா 35 ரன்களில் சஹாலின் பந்தில் ஆட்டமிழந்த போதும், க்ளாசென் மட்டும் நின்று அதிரடி காட்டினார். அரைசதத்தைக் கடந்து 81 ரன்களை அடித்துவிட்டே அவுட் ஆகியிருந்தார். அவர் அவுட் ஆகி பெவிலியனுக்குச் சென்ற போது ஏறக்குறைய ஆட்டமே முடிந்துவிட்டது. ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடிவிட்டுதான் க்ளாசென் அவுட் ஆகியிருந்தார். 18.2 ஓவர்களிலேயே தென்னாப்பிரிக்க அணி டார்கெட்டை சேஸ் செய்து முடித்தது. இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியிலும் தோல்வியைத் தழுவியது.

கடந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பௌலர்களே மிக முக்கிய காரணமாக இருந்தனர். ஒட்டுமொத்தமாக அத்தனை பேருமே ரன்களை வாரி வழங்கி ஏமாற்றியிருந்தனர். ஆனால், இந்தப் போட்டியில் அப்படி இல்லை. முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே வீசியிருந்தனர். புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்சல் படேல் மூவரும் இணைந்து 10 ஓவர்களில் 47 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். மூவரின் தனிப்பட்ட எக்கானமியுமே 6 க்கு கீழ்தான் இருந்தது. 149 டார்கெட்டை டிஃபண்ட் செய்கையில் 10 ஓவர்களில் வெறும் 47 ரன்களை மட்டுமே வழங்கியது பாரட்டப்பட வேண்டியதே. எனில், இந்திய அணி எங்கேதான் சொதப்பியது? கடந்த போட்டியை போன்றே அப்படியே இங்கேயும் சொதப்பிய ஸ்பின்னர்கள்தான் பிரச்னை.

Chahal

சஹாலும் அக்சர் படேலும் இணைந்து வீசிய 5 ஓவர்களில் மட்டும் 68 ரன்களை வாரி வழங்கியிருந்தனர். ஒரே ஓவரை வீசியிருந்த அக்சர் படேல் அந்த ஓவரில் மட்டும் 19 ரன்களைக் கொடுத்திருந்தார். சஹால் 4 ஓவர்களில் 49 ரன்களைக் கொடுத்திருந்தார்.

தொடர்ச்சியாக விக்கெட் விழுந்து கொண்டிருந்த சமயத்தில் நின்று நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைக்க தொடங்கிய பவுமா – க்ளாசென் கூட்டணி முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களைத் தற்காப்பாக ஆடிவிட்டு ஸ்பின்னர்களை நன்றாகக் கவனித்தார்கள். அக்சருக்கு பதில் ஆறாவது பௌலிங் ஆப்சனாகப் பயன்படுத்தப்பட்ட ஹர்திக் பாண்டடியாவாலும் கட்டுக்கோப்பாக வீச முடியவில்லை.

பிரதான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் ஸ்பின்னர்கள் வீசியிருந்தால் ஆட்டம் இன்னும் நெருக்கமாகச் சென்றிருக்கும்.

Indian team

ஒரு பௌலிங் யுனிட்டாக இந்திய அணி முழுமையாக செயல்பட்டாக வேண்டும். பேட்டிங்கிலும் இந்திய அணி தயக்கமின்றி முழுமையாக அதிரடியாக ஆட முற்பட வேண்டும். இவையெல்லாம் உடனடியாக அடுத்த போட்டியிலேயே நடந்தால் மட்டுமே தொடரை உயிர்ப்போடு வைத்திருக்க முடியும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.