மைசூரு : ஆசியாவில், நீண்ட தந்தங்கள் கொண்ட யானைகளில் ஒன்றான, 69 வயது யானை உயிரிழந்தது.
மைசூரு நாகரஹொளே மற்றும் பண்டிப்பூர் புலிகள் காப்பகத்திற்கு, அதிகமான சுற்றுலா பயணியர் வருகை தருவர். இப்பகுதியில் சுற்றித்திரியும் பெரும்பாலான யானைகள், கபினி அணைக்கு தண்ணீர் குடிக்க வரும்.இதில், போகேஸ்வர், 69, என்ற ஆண் யானையும் ஒன்று. இதற்கு, 2.58 மீட்டர் நீளத்துக்கு தந்தம் உள்ளது. ஆசியாவில் மிகப்பெரிய தந்தம் கொண்ட யானைகளில் ஒன்று போகேஸ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று காலை 9:30 மணியளவில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பண்டிப்பூர் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட குண்டாரே பகுதியில், போகேஸ்வர் இறந்து கிடந்ததை பார்த்தனர். இது குறித்து, உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும், கால்நடை மருத்துவர்களுடன் அங்கு விரைந்தனர்.அங்கேயே போகேஸ்வருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், யானைக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இயற்கையாக இறந்தது தெரிய வந்தது.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் வானிலை மாற்றம் துறை விதிகள்படி, போகேஸ்வர் யானையின் தந்தம் அகற்றப்பட்டு, ஆய்வுக்கு மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டது.வனத்துறையின் விதிமுறைகள்படி, வனப்பகுதியில் இறந்த யானையின் உடல், அதே பகுதியில் உள்ள கழுகுகளுக்கு உணவுக்காக விடப்பட்டுள்ளது.இந்த யானை குறித்து, வனத்துறையும், தனியார் சங்கங்களும் பல ஆவணப் படங்கள் எடுத்துள்ளன.
கபினிக்கு வரும் சுற்றுலா பயணியர், புலிகளை பார்க்கவில்லை என்றாலும் கூட, இந்த யானையை பார்த்தால் பரவசமடைவர் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.சந்தன கடத்தல் வீரப்பன் கண்ணில் படாமல் உயிர் தப்பிய சில யானைகளில், போகேஸ்வரும் ஒன்று என்றும் பேசி வருவர்.
Advertisement