டெல்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜராகிறார். அந்த வேளையில் நாடு முழுவதும் அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன் ஒரு பகுதியாக டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முதல் அமலாக்கத்துறை அலுவலகம் வரை சத்தியாகிரக பேரணி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு அனுமதி வழங்குமாறு காங்கிரஸ் கோரி இருந்த நிலையில், டெல்லி காவல்துறை பேரணிக்கு அனுமதி மறுத்துவிட்டது. சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் அனுமதி மறுக்கப்படுவதாக போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடம் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் இன்று காலை திட்டமிட்டபடி, பேரணி நடத்துவதற்காக டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் திரண்ட கட்சியினரை போலீஸ் கைது செய்தது. போராட்டம் நடத்த டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு புறப்பட தயாராக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள ராகுல் காந்தி வீடு முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி ஆஜராக உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.