தூத்துக்குடி மாவட்டத்தில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியை சேர்ந்த 25 பேர், வேளாங்கண்ணி பூண்டி மாதா கோவிலுக்கு சென்றுவிட்டு வாடகை வேனில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி திருச்சி மதுரை நெடுஞ்சாலையில், வேனின் முன்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது ஏறி, அடுத்த சாலையை கடந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 18 பேர் வீடு திரும்பிய நிலையில், நான்கு பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.