Karnataka’s Aishwarya has qualified for the Commonwealth Games by jumping 6.73 meters in the women’s long jump at the National Senior Athletics Championships in Chennai: 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மாநிலங்களுக்கு இடையிலான இந்தப் போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் தங்களின் சாதனையை பதிவு செய்து வருகின்றனர். மேலும், உலக தடகள மற்றும் காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்னோட்டமாக இப்போட்டி அமைந்துள்ளதால் வீரர், வீராங்கனைகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை கனிமொழி தங்கத்தை தட்டிச் சென்றார். பந்தய தூரத்தை 13.62 வினாடியில் கடந்த சி.கனிமொழி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இந்த போட்டியில் மேற்கு வங்காள வீராங்கனை மொமிதா மொண்டல் (13.86 வினாடி) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை தபிதா (14.09 வினாடி) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா சாதனை…
தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் கர்நாடகாவின் ஐஸ்வர்யா 6.73 மீட்டர் தூரம் தாண்டி காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் உட்பட 19 பேர் கலந்துகொண்ட இப்போட்டிக்கான இறுதிப்போட்டியில் மிகச்சிறப்பாக குதித்து தாண்டிய சாகசம் நிகழ்த்திய ஐஸ்வர்யா 6.73 மீட்டர் நீளம் தாண்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதுடன் காமல்வெல்த் வாய்ப்பையும் உறுதி செய்தார். மேலும் அவர் 2011 ம் ஆண்டு மயோகா நிகழ்த்தி 6.63 மீட்டர் என்ற சாதனையும் முறியடித்தார்.
இந்த போட்டியில் தமிழக வீராங்கனைகள் உமா மகேஸ்வரி மற்றும் ஹர்ஷினி முறையே ஆறாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.
இதேபோல், பெண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் உத்தரபிரதேச வீராங்கனை அன்னு ராணி 60.97 மீட்டர் ஈட்டி எறிந்து தங்கம் வென்று காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் மகாராஷ்டிரா வீரர் சித்தாந்த் உமானந்தா திங்கலியா (13.93 வினாடி) முதலிடமும், தமிழக வீரர் சுரேந்தர் (14.18 வினாடி) 2-வது இடமும், பஞ்சாப் வீரர் தருண்தீப் சிங் (14.21 வினாடி) 3-வது இடமும் பிடித்தனர்.
உயரம் தாண்டுதலில் மகாராஷ்டிரா வீரர் சர்வேஷ் அனில் ((2.24 மீட்டர்) தங்கப்பதக்கமும், கர்நாடக வீரர் ஜெஸ்சி சந்தேஷ் (2.21 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீரர் பாரதி விஸ்வநாதன் (2.18 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
ஆடவர் குண்டு எறிதலில் பஞ்சாப் வீரர் தஜிந்தர் பால் சிங் (20.34 மீட்டர்) தங்கப் பதக்கமும், பஞ்சாப் வீரர் கரன்வீர் சிங் (19.0 7 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், ராஜஸ்தான் விரர் அக்ஷய் வெண்கல பதக்கமும் வென்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil