செல்பி ஸ்பாட்டாக மாறிய விக்ரம் சுரங்கப்பாதை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கமல் பல இக்கட்டான சூழல்களை சாதுர்யமாக அதேசமயம் ரசிகர்களே யூகிக்க முடியாத வகையில் கையாளுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றுதான் தனது சக உளவு அதிகாரியான நரேன் எதிரி போலீசாரிடம் விசாரணையில் அகப்பட்டுக் கொண்டபின் அவரை மீட்பதற்காக சிறைக்குள் செல்வார் கமல். அவர்கள் வெளியே வந்தால் பிடித்துக் கொள்ளலாம் என்பது மிகப் பெரிய போலீஸ் பட்டாளமே கட்டிடத்தின் வெளியே காத்துக் கொண்டிருக்கும். ஆனால் கமல் நரேனை அங்கிருக்கும் ஒரு சுரங்கப்பாதை வழியாக அழைத்துக்கொண்டு வெளியேறுவார். அந்த சுரங்கப்பாதை சரியாக குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருப்போரின் இருக்கைகளுக்கு நடுவில் சுரங்கப்பாதை மூடியைத் திறந்து கொண்டு வெளிவருவதாக காட்சியமைத்து ரசிகர்களின் கைதட்டலை அள்ளினார் லோகேஷ் கனகராஜ்.
தற்போது அந்த சுரங்கப்பாதை மூடிக்கு மிகப்பெரிய மவுசு ஏற்பட்டுள்ளது. நிஜமாகவே குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் இருக்கைகளின் நடைபாதைக்கு இடையே ஏதோ ஒரு காரணத்துக்காக அமைக்கப்பட்ட மூடி ஒன்று இருக்கிறது. தற்போது அந்த மூடி மற்றும் அதன் அருகில் உள்ள கதவு அனைத்திலும் விக்ரம் படத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு படம் பார்க்க வரும் ரசிகர்கள் அந்த சுரங்கப்பாதை மூடி அருகில் நின்று செல்பி எடுத்துக் கொள்ளும் செல்பி ஸ்மார்ட் ஆக மாறி உள்ளது. இந்த புகைப்படங்களை திரையரங்கு உரிமையாளர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.