சென்னை: மக்கள் நல்வாழ்வு துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மிகச் சரியாக இரண்டு ஆண்டுகளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 51 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. குறிப்பாக, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மக்கள் நல்வாழ்வு துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மக்கள் நல்வாழ்வு துறைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இட மாற்றத்தில் சுவாரஸ்யமான விஷயத்தை கவனிக்க முடிந்தது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பல ஆண்டுகளாக சுகாதாரத் துறைச் செயலராக ராதாகிருஷ்ணன் இருந்தார். 2012-ம் ஆண்டு முதல் 2019 வரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்தப் பொறுப்பில் பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டார். கரோனா தொற்று முதல் அலையில் உச்சத்தில் இருந்த நேரத்தில் பீலா ராஜேஷ் இடமாற்றம் செய்யப்பட்டு மீண்டும் சுகாதாரத் துறைச் செயலராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி மக்கள் நல்வாழ்வு துறைச் செயலராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சரியாக 2 ஆண்டுகள் கழித்து ராதாகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆதாவது, ஜூன் 12, 2022-ல் ராதாகிருஷ்ணன் மக்கள் நல்வாழ்வு துறையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டார்.
ராதாகிருஷ்ணன் 2 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வு துறைக்கு வந்த அதே நாளில், 2 ஆண்டுகளுக்கு பிறகுப் அந்தப் பொறுப்பில் இருந்து இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.