வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஜி.எல். பீரிஸ் 2022 ஜூன் 10 – 11ஆந் திகதிகளில் சிங்கப்பூரில் நடைபெற்ற 19வது ஐ.ஐ.எஸ்.எஸ்.-ஷங்ரிலா உரையாடலில் பங்கேற்றார்.
ஐ.ஐ.எஸ்.எஸ்.-ஷங்ரிலா உரையாடல் ஆசியாவின் முதன்மையான பாதுகாப்பு உச்சிமாநாட்டாகக் கருதப்படுகின்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கை ஜனாதிபதி அதி மேதகு கோத்தாபய ராஜபக்ச அவர்களின் பிரதிநிதியாக அமைச்சர் பங்கேற்றார்.
அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் கட்டார் அமீர் மாண்புமிகு ஹமத் அல் தானி ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் தொடர்ச்சியாக, அமைச்சர் பீரிஸ், கட்டார் பிரதிப் பிரதமர் கலாநிதி. காலித் பின் மொஹமட் அல் அத்தியாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இச்சந்திப்பின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை எடுத்துக்காட்டியதுடன், பல்வேறு வழிகளில் கட்டார் அரசாங்கத்தின் ஆதரவையும் கோரினார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கௌரவ காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட் ஆகியோர் டோஹாவிற்கு விரைவில் விஜயம் செய்வதற்கு வசதிகளை வழங்குமாறு கட்டார் பிரதிப் பிரதமரிடம் அமைச்சர் மேலும் கோரிக்கை விடுத்தார். இலங்கைக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என கட்டார் பிரதிப் பிரதமர் அமைச்சரிடம் தெரிவித்தார்.
அமைச்சர் பீரிஸ், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிராந்தியப் பணிப்பாளர் திருமதி. கிறிஸ்டின் சிப்போலாவை சந்தித்து, இலங்கையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் எதிர்வரும் மாதங்களில், மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் சாத்தியமான பங்களிப்புக்கள் ஆகியன குறித்தும் கலந்துரையாடினார். நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர்களுக்கு, ஐ.ஐ.எஸ்.எஸ். பணிப்பாளர் நாயகம் மற்றும் தலைமை நிர்வாகி கலாநிதி. ஜான் சிப்மேன் வரவேற்பு அளித்ததுடன், இது உச்சிமாநாட்டின் முக்கிய உரையை ஆற்றிய ஜப்பானின் பிரதம மாண்புமிகு மந்திரி ஃபுமியோ கிஷிடாவை சந்தித்தல் உட்பட பல்வேறு உயர் மட்ட வலையமைப்புத் தொடர்பிற்கான வாய்ப்பை வழங்கியது. ஏனைய பங்கேற்பாளர்களில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மாண்புமிகு லாயிட் ஜே. ஆஸ்டின் III மற்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு மந்திரி மாண்புமிகு வெய் ஃபெங்கே ஆகியோர் அடங்குவர்.
உச்சிமாநாடு ஜூன் 11ஆந் திகதி அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் வியூகம், பல்முனை பிராந்தியத்தில் புவிசார் அரசியல் போட்டியை நிர்வகித்தல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் புதிய வடிவங்களில் கவனம் செலுத்தும் முழுமையான அமர்வுகளுடன் தொடங்கியது. தொடக்க அமர்வின் ஒருபுறம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், உலக பொருளாதார மன்றத்தின் (டாவோஸ்) தலைவர் திரு. போர்ஜ் பிரெண்டேவை சந்தித்து, முக்கியமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஆதரவைக் கோரினார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் இலங்கை தொடர்ச்சியாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி. இங் எங் ஹென் நடாத்திய அமைச்சர்கள் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், தனது விஜயத்தை நிறைவு செய்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஜூன் 13