வேறு நாடுகளிடம் கச்சா எண்ணெய் கிடைக்காவிட்டால், ரஷ்யாவிடம் இருந்து வாங்குவோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து உள்ளார்.
அண்டை நாடான இலங்கையில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்த எரிபொருட்களுக்காக பல கி.மீ. தூரத்துக்கு மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க தடை விதித்துள்ளன.
இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இலங்கைக்கு எரிபொருள் தேவை அதிகமாக உள்ளது. வழக்கமாக வாங்கும் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயும், நிலக்கரியும் வாங்க முயன்று வருகிறோம். வேறு எங்காவது கிடைத்தாலும் வாங்குவோம். இல்லாவிட்டால், மீண்டும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவோம். தனியாரிடமும் கச்சா எண்ணெய் வாங்க எங்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நாங்களே உருவாக்கிக் கொண்டது தான். காய்கறிகள் விலை 3 மடங்கு கூடிவிட்டது. நெல் சாகுபடி மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது. நான் இதற்கு முன்பு அரசாங்கத்தில் இருந்தபோதெல்லாம், மக்களுக்கு 3 வேளை உணவு கிடைப்பதையும், வருமானம் உயருவதையும் உறுதி செய்துள்ளேன். ஆனால் இப்போது மக்கள் படும் வேதனையை ஒரு குடிமகனாகவும், பிரதமராகவும் அச்சத்துடன் பார்க்கிறேன்.
பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு… இந்திய கப்பலை எதிர்பார்த்திருக்கும் இலங்கை!
2024 ஆம் ஆண்டு வரை உணவு தட்டுப்பாடு நீடிக்கும். உணவு தானிய ஏற்றுமதியை பல நாடுகள் நிறுத்தி விட்டன. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்னென்ன திட்டங்கள் அவசியம் என்று நாங்கள் அடையாளம் காண வேண்டும். அந்த திட்டங்களுக்காக சீனாவிடமோ அல்லது வேறு நாடுகளிடமோ கடன் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.