சியோல்: வடகொரியாவில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அதிகாரத்தைப் பயன்படுத்துவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில நாட்களுக்கு முன் உறுதிமொழி எடுத்திருந்தார். இந்த நிலையில், வடகொரியாவின் எல்லைப் பகுதியில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக தென் கொரியாவின் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தென்கொரிய ராணுவம் தரப்பில் கூறும்போது, “நட்பு நாடான அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா நிலையான ராணுவ வழிமுறைகளைப் பேணுகிறது. இந்த நிலையில், வடகொரியாவின் எல்லையில் ஞாயிறு காலை பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது. சில மணி நேரங்கள் இந்தச் சத்தம் தொடர்ந்தது” என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வடகொரிய ராணுவமோ “நாங்கள் ஆயுத பரிசோதனைதான் நடத்தினோம்” என்று விளக்கமளித்துள்ளது. ஆனால், எம்மாதிரியான சோதனை, எதற்காக நடத்தப்பட்டது போன்ற தகவல்களை வெளியிடவில்லை.
“வடகொரியா மீண்டும் ஒருமுறை ஏவுகணை பரிசோதனை செய்வதை நாங்கள் விரும்பவில்லை” என்று சீனா ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
வடகொரியாவும் ஏவுகணை சோதனையும்: வடகொரியா கடந்த ஜனவரி மாதம் ஏவுகணை பரிசோதனை ஒன்றைச் செய்தது. 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா இதுவரை 10 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்தது. வடகொரியாவின் அச்சமூட்டும் செயல்பாடுகள் கவலையை அளித்திருப்பதாக அண்டை நாடுகளான தென் கொரியாவும், ஜப்பானும் தெரிவித்துள்ளன.
கரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது என்று ஐ.நா கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.