புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜராவதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய பேரணி, விசாரணை அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சி என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விசாரணை அமைப்புக்கு அழுத்தம் தரும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் இன்று பேரணி நடத்தியுள்ளனர். காந்தி குடும்ப ஊழல் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதனால், காந்தி குடும்பத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சியாகவே இந்தப் பேரணியை நடத்தியுள்ளனர்.
1930களில் அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடட் என்பது 5000க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை பங்குதாரர்களாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்படிப்பட்ட நிறுவனத்தை இன்று ஒரு தனிப்பட்ட குடும்பம் கையகப்படுத்தியுள்ளது.
ஆசோசியேட் ஜர்னல்ஸின் இலக்கு என்னவோ பத்திரிகை நடத்துவதே. ஆனால் 2008ல் அந்த நிறுவனம் இனி செய்தித்துறையில் இருக்கப்போவதில்லை என்று கூறி ரியல் எஸ்டேட் தொழிலை ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சி இந்நிறுவனத்துக்கு ரூ.90 கோடி கடன் கொடுத்தது அனைவரும் அறிந்ததே.
காங்கிரஸ் கட்சிக்காக நிதி கொடுத்தவர்களுக்கு அந்த நிதி பொது சேவைக்காக அல்ல ஒரு குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பேரணியும் கைதும்: முன்னதாக, இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வந்தனர். அங்கு சில நிமிடங்கள் ஆலோசனைக்குப் பின்னர் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராகப் புறப்பட்டார். அவருக்கு ஆதரவாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், திக்விஜய் சிங், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், கவுரவ் கோகோய், ராஜீவ் சுக்லா, ஜோதிமணி போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்களும், கட்சித் தொண்டர்களும் காத்திருந்தனர். அவர்கள் ராகுல் ஆதரவு பேரணியில் பங்கேற்றனர்.
ஏற்கெனவே பேரணிக்கு தடை விதித்திருந்த டெல்லி காவல்துறை காங்கிரஸ் மூத்த தலைவர்களை பேருந்தில் ஏற்றி அப்புறப்படுத்தியது. அவர்கள் அனைவரும் பல்வேறு காவல்நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். டெல்லி துக்ளக் சாலை காவல்நிலையத்தில் இருந்த ராஜஸ்தான் முதல்வர் கெலாட், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை பிரியங்கா காந்தி நேரில் சென்று சந்தித்தார்.