டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். உள்துறை, மின்சாரம், பொதுப்பணித் துறை, தொழில், நகர்ப்புற வளர்ச்சி ஆகிய முக்கிய இலாகாக்களையும் அவர் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்த நிலையில், சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கிய நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார்.
அவரது கைதுக்கு ஆம் ஆத்மி அரசு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. சத்தியேந்திர ஜெயின் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் நீடிக்காது; நீதித்துறையின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்; விரைவில் அவர் வெளியே வருவார் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், சத்தியேந்திர ஜெயினை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், அவரது காவல் இன்றுடன் முடிவடைந்ததால், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின் போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி எதுவும் கோரவில்லை.
இதையடுத்து, சத்தியேந்திர ஜெயினை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, தனக்கு ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை காலை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.