சுந்தர் சி, ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பட்டாம்பூச்சி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘குற்றம் குற்றமே’ படத்திற்குப் பிறகு, ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பட்டாபூச்சி’. புலனாய்வு த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் ஹனி ரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திர்த்தில் நடித்துள்ளனர்.
அவ்னி டெலி மீடியா சார்பில் நடிகை குஷ்பூ தாயரித்துள்ள இந்தப் படத்தை பத்ரி நாரயணன் எழுதி இயக்கியுள்ளார். நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘பட்டாம்பூச்சி’ படத்தில் சுந்தர் சி கதாநாயகனாகவும், ஜெய் முதல் முறையாக சைக்கோ வில்லனாகவும் நடித்துள்ளனர்.
கடந்த மாதம் 13-ம் தேதி படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியானநிலையில், தற்போது இந்தப் படம் வருகிற ஜுன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக புது போஸ்டருடன் அறிவித்துள்ளது. அதே தேதியில், விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’, சிபிராஜின் ‘மாயோன்’, அசோக் செல்வனின் ‘வேழம்’, கலையரசனின் ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’ ஆகிய படங்களும் வெளியாகின்றன. மேலும் சுந்தர் சி -யின் இயக்கத்தில் உருவாகி வரும் புதியப் படம் ஒன்றில் ஜெய், 3 கதாநாயகர்களில் ஒருவராக, ‘கலகலப்பு 2’ படத்திற்குப் பிறகு இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.