ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்பக்கூடாது என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம்… இன்று வரை அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. சொந்தப் பணத்தை இழந்தது ஒருபுறம் கடன் வாங்கி பணத்தை இழந்தது மறுபுறம் என மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலைகள் நடக்கின்றன. கடந்த காலங்களில் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சற்று பின்னோக்கி பார்த்தால் அதிர்ச்சியடைய வைக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்தால் பல உயிர்கள் பறிபோகும்நிலையில், இதனை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பல நாடுகளில் சூதாட்டத்திற்கு அனுமதி இருக்கும்போதிலும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அனுமதியில்லை. ஐக்கிய அரபு அமீரகம், வட கொரியா, ஜப்பான், கம்போடியா, கத்தார் ஆகிய நாடுகள் சூதாட்டத்தை தடை செய்துள்ளன.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் நாட்டில் பல்வேறு சிக்கல்களும் பிரச்னைகளும் எழுந்திருப்பதால் அனைத்து வகை ஊடகங்களுக்கும் மத்திய அரசு ஒரு அறிவுறுத்தலை விடுத்திருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை ஆன்லைன் சூதாட்டம் என்பது ஒரு சட்ட விரோத செயல் எனவும், மேலும் ஆன்லைன் சூதாட்டங்கள் சமூக சிக்கல்களையும், நிதி பிரச்னைகளையும் ஏற்படுத்துவதால் இது தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி சமூக வலைதளங்கள், இணையதளங்கள் மற்றும் ஊடகங்கள் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்துள்ள நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM