அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாகின. இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, 2010ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங்இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வசமும் 24 சதவீத பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் வசமும் வந்தன. தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீண்டும் வெளியாகி வருகிறது.
இதனிடையே, ரூ.2,000 கோடி மதிப்புள்ள அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார். அதன்படி, சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விசாரணை நடைபெறுவதாகவும், ஆளும் கட்சி மத்திய அமைப்புகளை சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சி, நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தது.
அதன்படி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், திக்விஜய் சிங், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி அலுவலகத்துக்கு வந்த ராகுல் காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றார். இதனால், அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, விசாரணைக்காக ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தினுள் சென்றார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஊழல் அம்பலமானதால் காங்கிரஸ் கட்சியினர் வீதிகளின் இறங்கு போராடுவதாக மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இராணி சாடியுள்ளார். இதுகுறித்து கருத்து தொிவித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஸ்மிர்தி இராணி, “காங்கிரஸ் தலைவா்களின் ஊழல் அம்பலமாகி விட்டதால், அமலாக்கத்துறைக்கு அழுத்தம் கொடுக்க தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது காந்தி குடும்பத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சி.” என்றார்.
ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் காந்தி குடும்பத்தினர் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையில் ஆர்வம் காட்டுவது ஏன் எனவும் அவர் அப்போது கேள்வி எழுப்பினார்.