ஓசூர் வட்டத்தில் கோடை காலத் தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக முள்ளங்கி மகசூல் இருமடங்கு உயர்ந்துள்ளது. அதேநேரம் சந்தையில் விலை பாதியாக குறைந்துள்ளது.
ஓசூர் வட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காய்கறி வகைகள் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் நடப்பாண்டு கோடை காலத்தில வழக்கத்தை விட மழை தொடர்ச்சியாக பெய்ததால் இங்குள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. மேலும், கோடை மழையால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது.
இதனால், ஓசூர் வட்டத்தில் சொட்டுநீர் பாசனம் மூலமாக காய்கறிகள் பயிரிடும் பரப்பளவு அதிகரித்து, காய்கறி மகசூல் இரு மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக ஓசூர் பகுதியில் முள்ளங்கி மகசூல் இருமடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரம் விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக பத்தலப்பள்ளி காய்கறி சந்தை வியாபாரிகள்சங்கத் தலைவர் ராஜாரெட்டி கூறியதாவது: ஓசூர், சூளகிரி, தேன்கனிக் கோட்டை, தளி, பாகலூர், கெலமங் கலம் உள்ளிட்ட பகுதிகளில் முள்ளங்கி மகசூல் அதிகமாக உள்ளது. தினமும் 3 முதல் 4 டன் வரை முள்ளங்கி சந்தைக்கு வரத்து உள்ளது.
இங்கிருந்து சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழக த்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கேரளா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் முள்ளங்கி விற்பனைக்கு செல்கிறது. வழக்கமாக கோடை காலத்தில் மழை குறைந்து முள்ளங்கி விளைச்சல் பாதிக்கப்படும். ஆனால் இந்தாண்டு கோடை காலத்தில் பெய்த தொடர்மழை காரணமாக விளைச்சல் அதிகரித்து விலை பாதியாக குறைந்துள்ளது.
குறிப்பாக மொத்த விற்பனையில் கடந்த காலங்களில் 20 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை முள்ளங்கி ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ரூ.250-க்கு விற்பனை செய்யப் படுகிறது. இதனால், விவசாயி களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.