இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பதாய் ஹோ’ திரைப்படத்தைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்டு ரிலீஸிற்குத் தயாராக இருக்கும் படம்தான் ‘வீட்ல விஷேசம்’. அத்திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றியும், தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் பற்றியும் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் நடிகை அபர்ணா பாலமுரளி.
ரீமேக் படங்கள் பெருமளவில் வந்தாலும், அதன் ஒரிஜினல் சாயல்தான் எல்லோரின் மனதிலும் பதியும். உங்களை ரீமேக் படத்தில் நடிக்கக் கூப்பிட்டபோது எப்படி இருந்தது மனநிலை?
இந்தப் படம் இந்தியில் வெளியானபோதே நான் பார்த்தேன். ஒரிஜினல் வெர்ஷனில் சன்யா மல்ஹோத்ரா நடித்திருப்பார். அவர மாதிரியே நடிக்காம, எப்படி வித்தியாசமா நடிக்க முடியும்னு யோசிச்சு தான் இந்தப் படத்தை பண்ணியிருக்கேன். இந்தப் படம் இந்தியைப் போல அப்படியே இல்லாம நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி எடுத்திருக்காங்க. வசனம் எல்லாமே ரொம்ப எளிமையா இருக்கும்.
ஏற்கெனவே ஊர்வசியுடன் `சூரரைப் போற்று’ படத்தில் நடித்திருந்தீர்கள். தற்போது இந்தப் படத்திலும். அவர்களின் நடிப்பைப் பற்றி?
சூரரைப் போற்று படத்துல ஊர்வசி மேம் ரொம்ப மெட்ச்யூர்டான அம்மா கதாபாத்திரத்தில் நடிச்சிருப்பாங்க. இதுல ரொம்பவே இன்னசென்டா குறும்பான ஒரு கதாபாத்திரத்தில நடிச்சிருக்காங்க. படத்துல ஊர்வசி மேம்க்கும், சத்யராஜ் சார்க்கும் நல்லாவே கெமிஸ்ட்ரி வொர்க அவுட் ஆகியிருக்கும்.
உங்கள் கரியரில் ஒரு மைல்கல் என்றால் அதை ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தைச் சொல்லலாம். அந்தப் படம் பின்னாளில் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அந்தப் படத்திற்கு இவ்வளவு பெரிய ரீச் இருக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?
நிச்சயமா இல்ல. அந்தப் படம் நடிச்சு முடிச்சோனே நான் குஜராத் போய்ட்டேன். படம் ப்ரோமஷனுக்குக் கூடநான் வரல. அதனால என் கேரக்டர் கடைசி வரைக்கும் சர்ப்ரைஸாவே இருந்துச்சு. ஆனா கடைசில நல்ல வரவேற்பு பெற்றுச்சு. படம் ரிலீசாகி நாலு நாள் கழிச்சு தான் நான் தியேட்டர்ல போய் பார்த்தேன். மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைச்சா, அந்தப் படத்தோட இயக்குநர் திலீஸ் போத்தன் கூட பணியாற்றுவேன்.
சூரரைப் போற்று டீம் உடன் இன்னும் தொடர்பில் இருக்கீங்களா?
இப்போ சூரரைப் போற்று இந்தி வெர்ஷனை அக்ஷய் குமாரை வைச்சு எடுத்திட்டு இருக்காங்க. சுதா மேம் தான் அதுக்கும் டைரக்டர். அதே டீம் தான் இந்தப் படத்தையும் இயக்கிட்டு வருது. அவங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றேன்.
அடுத்து என்ன படங்கள்ல நடிச்சிட்டு இருக்கீங்க?
தங்கம்னு ஒரு மலையாள படத்துல நடிச்சிருக்கேன். அதை பகத் பாசில் தயாரிச்சிருக்கார். அடுத்து குஞ்சக்கோ போபனுடன் பத்மினினு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். தமிழ்ல `வீட்ல விஷேசம்’ வரப்போகுது. அசோக் செல்வன் கூட `நித்தம் ஒரு வானம்’னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன்.