பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது மற்றும் முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி உள்ளார்.
அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சில மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் அதிகரித்துள்ள கொரோனா பரவல் மற்றும் குறைக்கப்பட்ட கொரோனா பரிசோதனை ஆகியவற்றை சுட்டிக்காட்டி சரியான நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொரோனா வழக்குகளை முன்கூட்டியே அடையாளம் காண வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோன்று பரிசோதனை செய்யும்போது மரபணு மாற்றம் பரிசோதனையை செய்ய வேண்டுமெனவும் சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பரிசோதனை, தடுப்பூசி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது என ஐந்து மடங்கு உத்திகளை பின்பற்ற வேண்டும். சர்வதேச விமான பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட தடுப்பூசி 2.0 பிரசாரத்தின் நிலை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் நேரில் ஆய்வுசெய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அதேபோன்று பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவடையவில்லை. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவைகளை கடைபிடிப்பதை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டுள்ளார். மாநில அரசுகள் கொரோனா தடுப்பூகள் காலாவதி ஆவதை கண்காணித்து அவற்றை உடனடியாக பயன்படுத்துவதை உறுதி செய்யவேண்டும் எனவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டுள்ளார்.
– விக்னேஷ் முத்துSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM