இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கும் ஜி.வி பிரகாஷ்குமார் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.
ஜி.வி.பிரகாஷ் பிறந்த ஆண்டு 1987. அம்மா ரெஹானா பாடகி மற்றும் இசையமைப்பாளர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த சகோதரி இவர்.
என்ன தான் இசையமைப்பாளர் குடும்பத்தில் பிறந்தாலும் ஜி.வி.பிரகாஷ், தான் ஒரு பொறியாளராகவோ கிரிக்கெட்டராகவோ ஆவேன் என எதிர்பார்த்தாராம்.
பள்ளி நாட்கள் ஒன்றில் அவரது ஆசிரியர் கேட்டுக்கொண்டதன் பேரில் கீ-போர்ட் வாசிக்கப் பயிற்சி எடுத்துக் கொண்டார் ஜி.வி. அடுத்த இரண்டு நாட்களில் கீ-போர்ட் பழகி, வாசித்துக் காட்டி பரிசும் வாங்கியிருக்கிறார்.
இயக்குநர் வசந்தபாலனின் `வெயில்’ படம்தான் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த முதல் படம். அதற்கு முன்பே ரஹ்மான் உடனும் ஹாரிஸ் உடனும் சில படங்களில் பணியாற்றிருக்கிறார்.
தன்னுடைய பள்ளித் தோழி சைந்தவியை 2013-ல் கரம் பிடித்தார் ஜி.வி. ‘யார் இந்த சாலையோரம்’, ‘யாரோ இவன்’ மற்றும் ‘எள்ளுவய பூக்கலயே’ ஆகிய பாடல்களுக்கு குரல் வழியே உயிர் கொடுத்தவர் சைந்தவி.
2010-ல் வெளியான ‘மதராசப்பட்டினம்’ படத்தின் ஆல்பம் நல்ல ஹிட். ‘பூக்கள் பூக்கும் தருணம்’ இன்றைக்கு வரை காதலர்களின் எவர் கிரீன் சாங்.
இவரோட மெலடிகளில் ஏதோ ஒரு மேஜிக் இருக்குப்பா என இலயித்துக் கொண்டிருக்கும் போது `அசுரன்’, `சூரரைப் போற்று’ போன்ற படங்களின் பிஜிஎம்மில் நெருப்பைப் பற்ற வைத்திருப்பார்.
ஜி.வி.பிரகாஷ் ஆக்டர் ஆக வேண்டும் என முதலில் விருப்பப்பட்டது ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் அவர் இயக்கும் வாய்ப்பு அமையவில்லையெனினும் 2015-ல் `டார்லிங்’ படத்தில் ஜி.வி. நடிகராக அறிமுகமாகிறார்.
18 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துவிட்டார். அதே நேரத்தில் இசையமைப்பாளராகவும் பணியாற்றிருக்கிறார். இவருக்கு எங்கிருந்து இவ்வளவு நேரம் கிடைக்கிறது என்பதே வியப்பான ஒன்று.
`ஒரு பாதி கதவு’ பாடல் நா.முத்துக்குமாரின் வரிகளில் ஜி.வி.யின் மேஜிக் நிகழ்ந்த பாடல். இவர்கள் காம்போவில் வந்த பல பாடல்கள் காலத்துக்கும் நிற்கக்கூடியவை. ஆலால இசைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!