ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களைத் தவிர்க்குமாறும், அதனை ஒளிபரப்புவது சட்ட விரோதமானது என்றும் ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
அண்மைக்காலமாக இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி பணம் மட்டுமல்லாமல் உயிரையும் இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்து வருகிறது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்புவதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நடந்து வரும் சட்ட விரோதமான பந்தயம் மற்றும் சூதாட்டம் காரணமாக பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சமூக சிக்கல்களையும், நிதி பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது.
இதை ஊக்குவிக்கும் விதமாக ஆன்லைன் சூதாட்டங்கள் விளம்பரங்கள் இருக்கிறது. ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்கள், ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் உட்பட, இந்தியாவில் இது போன்ற விளம்பரங்களைக் காட்டவோ அல்லது இந்திய பார்வையாளர்களை குறிவைத்து இது போன்ற விளம்பரங்களை ஒளிப்பரப்பவோ கூடாது.
இவ்வாறு அதில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், ஆன்லைன் சூதாட்ட அவரச தடைச் சட்டம் விதிக்க, ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சிறப்புக் குழு ஒன்றை ஏற்கனவே அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.