குன்றத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டியதோடு தனியார் பள்ளி போல் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்ப படிவங்கள் வாங்கிச் சென்றனர்.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் இன்று முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குன்றத்தூர் நகராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்களது பெண் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். குறிப்பாக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை இயங்கும் இந்த பள்ளியில் குன்றத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பெற்றோர் தங்களது பெண் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்க்க காலை முதலே விண்ணப்பப் படிவங்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த கல்வியாண்டில் 2065 மாணவிகள் பயின்று இந்தப் பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் அதைவிட கூடுதலாக மாணவிகள் சேர்க்கை அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். அரசுப் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர், பிள்ளைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சியை பார்க்கும்போது தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்பது போல் இருந்தது. இருப்பினும் தொடர்ந்து மாணவர் சேர்க்கை இந்த பள்ளியில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் வசந்தி கூறுகையில், பள்ளியில் பயிலக் கூடிய அனைத்து மாணவிகளையும் தங்களது பிள்ளைகள் போல் பாவித்து ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். மேலும், மாணவிகளுக்கு சிறந்த முறையில் கல்வியும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர். அரசு சார்ந்த நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்விலும் மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM