பல லட்சம் மதிப்புள்ள ஆர்டர்கள் குவிவதாக கூறி ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த கழுதைப்பண்ணை உரிமையாளர்.
ஒருவரை மட்டம்தட்டி திட்டும்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படும் வார்த்தை கழுதை. ஆம். அவர்கள் கழுதைப்பாலின் மவுசு தெரியாதவர்களே. கேரளா எர்ணாகுளத்தை அடுத்து இந்தியாவிலேயே இரண்டாவது கழுதைப்பண்ணையை தொடங்கியுள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீவாஸ் கவுடா. மங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள இந்த கழுதைப்பண்ணையில் இனப்பெருக்க மையத்தையும் அமைத்துள்ளார். பிஏ பட்டதாரியான கவுடா முன்பு பண்ணைகள், விவசாயம், கால்நடை பராமரிப்பு, கால்நடை சேவைகள், பயிற்சி மற்றும் தீவன மேம்பாட்டு மையம் போன்ற பல தொழில்களை ஒருகை பார்த்துவிட்டு தற்போது கழுதை பண்ணை தொழிலில் இறங்கியுள்ளார்.
2020ஆம் ஆண்டு கொரோனா பொதுமுடக்க காலத்தில் சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு ஆட்டுப்பண்ணையை தொடங்கிய கவுடா, அங்கேயே முயல்கள் மற்றும் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். தற்போது அதே இடம் 20 கழுதைகளுக்கு இருப்பிடமாக மாறியிருக்கிறது.
இந்தியாவில் 2012இல் 3,60,00 ஆக இருந்த கழுந்தைகள் எண்ணிக்கை 2019இல் 1,27,000ஆக குறைந்தது. தற்போது பெருகிவரும் வாஷின்மெஷினகளால் ஆரம்பகாலத்தில் இருந்த டோபிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதேபோல் அவர்கள் அதிகம் பயன்படுத்திய கழுதை இனங்களும் குறைந்துவிட்டது என்கிறார் கவுடா.
தனது பண்ணை குறித்து அவர் கூறுகையில், ஆரம்பத்தில் நான் கழுதைப்பண்ணை தொடங்கப்போவதாக கூறியபோது பலரும் என்னை விமர்சித்தனர். ஆனால் கழுதைப்பாலில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதால் இதன் விற்பனை அமோகமாக நடந்துவருகிறது. 30மி.லி கழுதைப்பாலின் விலை ரூ.150 என்றால் நம்ப முடிகிறதா? அடுத்த மாதத்திலிருந்து சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள் மற்றும் கடைகளுக்கும் கழுதைப்பாலை விநியோகம் செய்யவிருக்கிறோம் என்கிறார். மேலும் அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தனக்கு ரூ.17 லட்சம் மதிப்புள்ள ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகவும் கூறி கேட்போரை வாயடைக்க வைக்கிறார் கவுடா.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM