அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட அருங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன். இவருக்குச் சொந்தமான கிணற்றில் கடந்த சில வாரங்களாக துர்நாற்றம் வீசிவந்திருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு துர்நாற்றம் கடுமையாக வீசியதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் கிணற்றில் எட்டிப் பார்த்தனர். அப்போது, ஒரு சாக்கு மூட்டை மிதந்துகொண்டிருந்தது. இது குறித்து கீழப்பழுவூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸாரும்,ம் தீயணைப்புவீரர்களும் வந்து மூட்டையை மேலே கொண்டுவந்தனர்.
பின்னர் அந்த மூட்டையைத் திறந்து பார்த்தபோது அதில் ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையிலிருந்தது. அதையடுத்து உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்தவர் தஞ்சை மாவட்டம் வடக்கு வாசலைச் சேர்ந்த வசந்தி என்பது தெரியவந்தது. இவர் அரியலூர் மாவட்டம், அருங்கால் கிராமத்தைச் சேர்ந்த செல்வி, மாரியாயி ஆகியோருடன் பழக்கத்திலிருந்திருக்கிறார். இந்நிலையில் கிராமத்தில் நடந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக, பத்து நாள்களுக்கு முன்பே செல்வி வீட்டில் வசந்தி தங்கியிருந்திருக்கிறார்.
அப்போது இருவருக்குமிடையே பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதனால் செல்வி, மாரியாயி இருவரும் சேர்ந்து வசந்திக்குப் பாலில் அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளைக் கலந்துகொடுத்து அவரைக் கொலைசெய்திருக்கின்றனர். பின்னர் வசந்தியின் உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியிருக்கின்றனர்.
கொலைசெய்துவிட்டு அரியலூரில் தலைமறைவாக இருந்த மாரியாயி, கரூரில் தலைமறைவாக இருந்த செல்வி ஆகிய இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரைத் தேடிவருகின்றனர்.
என்ன நடந்தது என்று வழக்கை விசாரித்து வரும் போலீஸாரிடம் பேசினோம். “வசந்தியை பாலியல் தொழிலில் ஈடுபட அழுத்தம் கொடுத்திருக்கிறார் செல்வி. அதற்கு வசந்தி மறுப்பு தெரிவிக்கவே மாரியாயி, செல்வி இருவரும் இணைந்து பாலில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து வசந்தியைக் கொலைசெய்திருக்கின்றனர். இது சம்பந்தமாக இருவரைக் கைதுசெய்திருக்கிறோம். இதில் ஒரு வழக்கறிஞரும் சம்பந்தப்பட்டிருக்கிறார். அவரை விசாரித்துக்கொண்டிருக்கிறோம்” என்றனர்.