ராமேசுவரம்: நூறு நாள் வேலை திட்டத்தில் முள்மரங்களை அகற்றியபோது பார்வை பாதிக்கப்பட்ட மீனவப் பெண், முதல்வரிடம் நிவாரணம் கோரி குறைதீர் கூட்டத்தில் மனு அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
இங்கு தங்கச்சிமடம் ஊராட்சி குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பாலகுமார் என்பவர் மனைவி நாகவள்ளி (28) வந்திருந்தார். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், கணவரின் வருவாய் போதாத நிலையில் தங்கச்சிமடம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகின்றார்.
இவர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்த மனுவில், 100 நாள் வேலை திட்டத்தில் சீமை கருவேலம் மரங்களை அகற்றும்போது முள் கண்ணில் குத்தி அதனை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாவும், ஆனால் ஒரு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதால் பார்வையை மீண்டும் பெற மருத்துவ சிகிச்சை பெற முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் 119 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வுகாண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் அறிவுறுத்தினார்.