திருவனந்தபுரம்: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (14ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி இன்று மாலை 5 மணிக்கு நடையை திறக்கிறார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை முதல் வரும் 19ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, படி பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 19ம் தேதி இரவு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆனி மாத பூஜைகள் நிறைவடையும். மீண்டும் ஆடி மாத பூஜைகளுக்காக ஆகஸ்ட் 16ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு இன்று முதல் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். நிலக்கல்லில் உடனடி முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.