புதுடில்லி : உத்தர பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீடு இடிக்கப்பட்டதைக் கண்டித்து, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பா.ஜ., பிரமுகர்கள் முஸ்லிம் மதம் குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்ததைக் கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இதில், உத்தர பிரதேசத்தில் கான்பூர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட இடங்களில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஜாவத் அகமது பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் பிரயாக்ராஜில் முறையான அனுமதியில்லாமல் வீடு கட்டிய தாக கூறி அவருடைய வீட்டை நகராட்சி நிர்வாகம், ‘புல்டோசர்’ வாயிலாக இடித்து தள்ளியது.கைது செய்யப்பட்டுள்ள ஜாவத் அகமதுவின் மகள் அப்ரீன் பாத்திமா, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் படித்தவர். மாணவர் சங்கத்தில் இருந்த அவர் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். முன்னாள் மாணவியின் வீடு இடிக்கப்பட்டதைக் கண்டித்து, பல்கலை மாணவர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement