சென்னை: தமிழகத்தில் 18 வயதை கடந்த 94.31 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி கடந்த 2021 ஜன.16-ம் தேதி தொடங்கியது. தற்போதைய நிலையில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. சுகாதார, முன்களப் பணியாளர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. அதேபோல, 18 வயதை கடந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடும் நோக்கில், ஒவ்வொரு சனிக்கிழமையும் 50 ஆயிரம் இடங்களில் மெகா முகாம் நடத்தப்பட்டது. இதுவரை 28 மெகா முகாம்கள் நடந்துள்ளன. 90 சதவீதம் பேருக்கு மேல் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டதால், மெகா முகாம்கள் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக கரோனா பரவல் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, கடந்த 12-ம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 94.31 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 84.81 சதவீதம் பேருக்கு 2-ம் தவணையும் போடப்பட்டுள்ளது. 15-18 வயது சிறுவர்களில் 29.88 லட்சம் பேருக்கு (89.29 சதவீதம்) முதல் தவணையும், 24.23 லட்சம் பேருக்கு (72.42 சதவீதம்) 2-ம் தவணையும் போடப்பட்டுள்ளது. சுகாதார, முன்களப் பணியாளர்கள், 60 வயதை கடந்தவர்களில் 13.52 லட்சம் பேருக்கு (41.69 சதவீதம்) பூஸ்டர் தவணை போடப்பட்டுள்ளது. 12-14 வயது சிறுவர்களில் 13.84 லட்சம் பேருக்கு (65.06 சதவீதம்) முதல் தவணை போடப்பட்டுள்ளது. முதல் தவணை, குறிப்பிட்ட காலத்தில் 2-ம் தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் சுமார் 1.50 கோடி பேர் உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் தவணை, குறிப்பிட்ட காலத்தில் 2-ம் தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் சுமார் 1.50 கோடி பேர் தமிழகத்தில் உள்ளனர்.