குவைத்: நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைகருத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டவர்களை குவைத் அரசு தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற உள்ளது.
நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர்கள் நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரின் கருத்துக்கு உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர்கள் இருவரும் கட்சி நடவடிக்கைக்கு ஆளாகினர். மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக முன்னாள் நிர்வாகிகளின் கருத்துக்கு கத்தார், குவைத், ஈரான் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் தங்கள் நாடுகளில் உள்ள இந்தியத் தூதர்களை நேரடியாக அழைத்தும் கவலை தெரிவித்தன.
நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்து விவகாரத்தில் குவைத்தில் உள்ள ஃபஹாஹீல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு போராட்டம் நடைபெற்றது.
குவைத்தில் உள்ள வெளிநாட் டவர்கள் போராட்டத்தில் பங்கேற்க கூடாது என குவைத் அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில் அதை மீறி பலர் இதில் பங்கேற்றனர். இவர்களை நாட்டி லிருந்து வெளியேற்ற குவைத் அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ‘தி அராப் டைம்ஸ்’ நாளிதழில் வெளியான செய்தியில், “குவைத்தில் வெளிநாட்டவர்கள் தர்ணா அல்லது ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யக் கூடாது என விதிமுறைகள் இருக்கும் நிலையில், இவர்கள் அதை மீறியதால் குவைத்திலிருந்து வெளியேற்றப்பட உள்ளனர். இவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்காக அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் குவைத் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வெளியேற்றப்படும் அனைவரும் மீண்டும் குவைத் வருவதற்கு தடை விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.