சென்னை: சிறையில் இருந்தால்தான் தலைவர் என்று இல்லை. திரையில் இருந்தாலும் தலைவர்தான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் பல ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் ரத்ததான குழு தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இக்குழுவை கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:
நான் மீண்டும் திரையில் நடிக்கச் சென்றுவிட்டதாக விமர்சிக்கின்றனர். சிறையில் இருந்தால்தான் தலைவர் என்று இல்லை. திரையில் இருந்தாலும் தலைவர்தான். மகாத்மா காந்திக்கு சினிமா பிடிக்காது. ஆனால், அவரை திரை மூலம் பார்த்தவர்கள் அதிகம். தண்டி யாத்திரையை திரை வழியாகத்தான் நான் பார்த்தேன்.
நான் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாட வரவில்லை. அது எனக்கு கிடைத்த படிக்கட்டு. 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எனது வீரமும், வைராக்கியமும் சற்றும் குறையவில்லை. என் திரைப்படத்தில் அரசியலும், சமூக சேவை பற்றிய விஷயங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.
தலைமைக்கு ஒரு கட்சி வந்துவிட்டால், அதற்கு சலாம் போட இது அரசாட்சி அல்ல. இது மக்களாட்சி. இதில் கேள்விகள் கேட்கப்படும். அதற்கு பதில் சொல்ல வேண்டும்.
ஒன்றியம் என்றாலே, தங்களைத்தான் சொல்வதாக சிலர் கோபித்துக்கொள்கின்றனர். நான் எல்லா ஒன்றியத்தையும்தான் சொல்கிறேன். ரத்தம் கொடுத்து உதவும்போது சாதி, மதம் மறந்து அண்ணன், தம்பி உறவு வலுக்கும்.
ஓட்டு எண்ணிக்கை, எவ்வளவு கமிஷன் வாங்கலாம், எவ்வளவு பணக்காரன் ஆகலாம் என்பது அல்ல அரசியல். ஓர் ஏழையை பணக்காரன் ஆக்குவது அல்ல அரசியல். ஏழைகளே இல்லாமல் ஆக்குவதுதான் அரசியல். அதுநிறைவேற, உங்களுக்கு பணத்தைபற்றி கவலைப்படாத ஒரு தலைவர் வேண்டும்.
என்னை நடிக்கவிட்டால் ரூ.300 கோடி சம்பாதிப்பேன். என் கடனை அடைப்பேன். வயிறார சாப்பிடுவேன். உறவினர்கள், நண்பர்களுக்கு முடிந்ததை கொடுப்பேன்.
என்னைவிட சிறப்பாக அரசியலை யாராலும் செய்ய முடியாது.அவர்களிடம் மேடை மட்டுமே உள்ளது. என்னிடம்தான் தொழில்நுட்பம் இருக்கிறது. படம் காண்பித்து அதன்மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும் என்றால் அதையும் செய்ய தயாராக இருக்கிறேன். நற்பணிதான் நம் அரசியல். அவர்களுக்கு அது வியாபாரம். நமக்கு அது கடமை. இவ்வாறு அவர் கூறினார். கட்சியின் துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா, மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.