ராகுல் காந்தியிடம் 10 மணி நேரம் விசாரணை!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இயக்குனர்களாக உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனம் மூலம், சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.

அது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. சோனியா காந்தி தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராவதற்காக ராகுல் காந்தி, தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் நேற்று காலை பேரணியாக சென்றார். ஆனால், பேரணிக்கு அனுமதி அளிக்கப்படாததால், ராகுல் காந்தி காரில் ஏறிச் சென்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆஜரானார்

rahul

4 மணி நேர விசாரணைக்குப் பின் உணவு இடைவேளைக்காக வெளியே வந்த ராகுல் காந்தி, ஸ்ரீகங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியை சந்திப்பதற்காக, பிரியங்காவுடன் சென்றார்.

இதையடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் மீண்டும் ஆஜராகி, அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்த விசாரணை இரவு 9.30 மணிவரை நீடித்தது. பின்னர் ராகுல் காந்தி கிளம்பிச் சென்றார். இதன்படி, சுமார் 10 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.

rahul

எனினும், பல்வேறு கேள்விகள் இன்னும் கேட்கப்படாததால், அவரை மீண்டும் இன்று ஆஜராக அமலாக்கத் துறையினர் சம்மன் அளித்துள்ளனர். இதனிடையே, அமலாக்கத் துறை அலுவலகம் அருகே திரண்டிருந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிப்பதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துவதாக, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

newstm.in

 

 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.