கொழும்பு : பிரதமர் மோடி மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி சர்ச்சையை கிளப்பிய இலங்கை மின்வாரிய தலைவர் எம்.சி.பெர்டினான்டோ ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த, 10ல், இலங்கை பார்லி., குழு முன் ஆஜரான பெர்டினான்டோ, காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்களை அதானி குழுமத்திற்கு வழங்கும்படி பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நிர்பந்தித்ததாக கூறினார். இது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்த புகரை மறுத்த கோத்தபய ராஜபக்சே, ‘மின் திட்டங்களில் மோடியின் தலையீடு எதுவும் இல்லை’ என, அறிக்கை வெளியிட்டார்.
இதை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் தன் பேச்சை வாபஸ் வாங்குவதாக பெர்டினான்டோ தெரிவித்தார். பார்லி குழு முன் ஆஜரான போது தன் மீது கூறப்பட்ட நியாயமற்ற புகார்கள் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகி, இந்திய பிரதமரை வம்புக்கு இழுத்ததாக பெர்டினான்டோ தெரிவித்திருந்தார். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் அவர் கூறினார்.
நேற்று பெர்டினான்டோ தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இலங்கை மின் துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா தெரிவித்தார். இலங்கை மின் வாரிய துணை தலைவர் நலிந்தா இலங்கோகூன், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உணவுப் பற்றாக்குறை
இலங்கையின் மக்கள் தொகை, 2.20 கோடி. இதில், 9.10 சதவீதம், அதாவது, 20 லட்சம் பேர் கொரோனாவுக்கு முன்னரே போதிய உணவின்றி அவதிப்பட்டு வந்துள்ளனர். அவர்களில், 1.80 லட்சம் பேர் பட்டினி நிலையில் இருந்துள்ளதாக, இலங்கை மத்திய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது.
Advertisement