புதுச்சேரி: சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை திரட்டி, அவர்களை நேரடி உணவு மானிய திட்டத்தில் இருந்து நீக்குவதற்கான பணியை குடிமைப்பொருள் வழங்கல் துறை முடுக்கி விட்டுள்ளது.
புதுச்சேரியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் மக்களுக்கு ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.மாநிலத்தில் இதுவரை 3,51,429 மஞ்சள், சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு நிற கார்டு வழங்கப்பட்டுள்ளது.
ரூ.140 கோடி மானியம்
அவர்களுக்கு, மாநில அரசின் கொள்கை முடிவின்படி, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரிசிக்கான மானியத் தொகையாக ஒரு கிலோவிற்கு 33.57 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. அதன்படி, மாதந்தோறும் 12 கோடி ரூபாயும், ஆண்டிற்கு ரூ.140 கோடி வரை, பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடி மானியமாக செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், சிவப்பு ரேஷன் கார்டுகளை, பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்கள், அதிக சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் பலரும் வைத்திருப்பதாகவும், அவர்கள் பல ஆண்டுகளாக அரசு மானியத்தை பெற்று வருவதாக வும் தொடர்ந்து புகார்கள் அதிகளவில் எழுந்தன.
அதிரடி நீக்கம்
அதையடுத்து, புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பட்டியலை பெற்ற குடிமைப்பொருள் வழங்கல் துறை, அவர்களது பெயர்களை நேரடி உணவு மானிய பட்டியலில் இருந்து நீக்கியது.ஆனாலும், சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள மத்திய அரசு ஊழியர்களை கண்டறிந்து, அவர்களின் பெயர்களை நீக்க முடிவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து, ‘சம்பளம் இல்லாமல் பல ஆண்டுகளாக வேலை செய்யும் மாநில அரசு ஊழியர்களின் பெயர்களை சிவப்பு ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. அதிக சம்பளம் வாங்கும் மத்திய அரசு ஊழியர்களை ஏன் நீக்கவில்லை’ என கேள்வி எழுந்தது.
விபரம் சேகரிப்பு
இந்நிலையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள உண்மையான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில், மத்திய அரசு ஊழியர்களை சிவப்பு ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை குடிமைப்பொருள் வழங்கல் துறை முடுக்கி விட்டுள்ளது. அதற்காக, அந்த ஊழியர்களின் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு விபரங்களை திரட்டி வருகிறது.
ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி பல்கலைக் கழகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் என மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களுக்கு குடிமைப்பொருள் வழங்கல் துறை, தனித்தனியே கடிதம் எழுதி, ஊழியர்கள் பற்றிய விபரங்களை திரட்டி வருகிறது.
முரண்டு பிடிக்கும் நிறுவனங்கள்
குடிமைப்பொருள் வழங்கல் துறையின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நிறுவனங்கள் ஊழியர்களின் பட்டியலை அனுப்பி வருகின்றன. ஆனால், மத்திய அரசு ஊழியர்கள் அதிகம் பேர் பணியாற்றும் ஜிப்மர், புதுச்சேரி பல்கலைக்கழகம் மட்டும் இன்னும் பட்டியலை அனுப்பாமல் முரண்டு பிடித்து வருகின்றன.
இதனால் அந்நிறுவனங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களை சிவப்பு ரேஷன் கார்டு பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்குவதில் தொடர்ந்து முட்டுகட்டை விழுந்துள்ளது.எனவே அந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு வாயிலாக இறுதி எச்சரிக்கை விடுக்கவும் புதுச்சேரி அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
வசதி படைத்த பலர், ஏழைகள் வைத்திருக்க வேண்டிய சிவப்பு ரேஷன் அட்டை வைத்துள்ளனர். அதே நேரத்தில், உண்மையான ஏழைகள் பலரிடம் மஞ்சள் ரேஷன் அட்டைகள் உள்ளன.எனவே அதிக சம்பளம் வாங்கும் மத்திய அரசு ஊழியர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்போது, வறுமைக் கோட்டில் வாழும் உண்மையான ஏழை பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டு கிடைக்கும் என்பதால், அதற்கான பணிகளை குடிமைப்பொருள் வழங்கல் துறை வேகப்படுத்தி வருகிறது.
சிவப்பு ரேஷன் கார்டு எவ்வளவு?
புதுச்சேரியில் ஏ.ஏ.ஒய். எனப்படும் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ ரேஷன் கார்டுகள்- 25,965, சிவப்பு ரேஷன் கார்டுகள்-1,51,830 என மொத்தம் 1,77,795 சிவப்பு ரேஷன் கார்டுகள் உள்ளன. பிராந்திய ரீதியாக வறுமைக் கோட்டிற்குகீழ் மக்களுக்கு புதுச்சேரி-1,35,415, காரைக்கால் – 30,629, மாகி-188, ஏனாம் 11,563 என்ற எண்ணிக்கையில் சிவப்பு ரேஷன் கார்டுகள் உள்ளன.
மத்திய அரசு ஊழியர் எவ்வளவு பேர்?
புதுச்சேரி மாநிலத்தில், மாநில அரசு ஊழியர்கள்-26,958, மத்திய அரசு ஊழியர்கள்-5247, தன்னாட்சி நிறுவன ஊழியர்கள்-6080, உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர்-2025 என மொத்தம் 40,310 அரசு ஊழியர்கள் உள்ளனர்.மொத்தமுள்ள 5247 மத்திய அரசு ஊழியர்களில், அரசிதழ் பதிவு பெற்றவர்கள்-433 பேர், அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்கள்-4814 பேர் உள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில், மாநில அரசு ஊழியர்கள்-26,958, மத்திய அரசு ஊழியர்கள்-5247, தன்னாட்சி நிறுவன ஊழியர்கள்-6080, உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர்-2025 என மொத்தம் 40,310 அரசு ஊழியர்கள் உள்ளனர்.
மொத்தமுள்ள 5247 மத்திய அரசு ஊழியர்களில், அரசிதழ் பதிவு பெற்றவர்கள்-433 பேர், அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்கள்-4814 பேர் உள்ளனர்.