Doctor Vikatan: எனக்கு வயது 81. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி கொண்டுள்ளேன். அதன் பிறகுதான் எனக்கு கோவிட் தொற்று வந்தது. இப்போது மூன்றாவதாக, பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள காத்திருக்கிறேன். அதை எப்போது போட்டுக்கொள்ளலாம்? கோவிஷீல்டுதான் போட்டுக்கொள்ள வேண்டுமா? பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்வதற்கு முன், எனது உடல்நலம் அதற்குத் தயாராக இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டுமா?
– மனோகரன், விகடன் இணையத்திலிருந்து.
இதற்கு பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி…
இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டாலும் சிலருக்கு தொற்று பாதிக்கலாம். ஏனெனில் தற்போது உபயோகத்தில் உள்ள தடுப்பூசிகள், தொற்று ஏற்பட்டாலும் அது தீவிரமாகாமல் உங்களைப் பாதுகாக்குமே தவிர, தொற்றே ஏற்படாமல் தடுக்காது.
பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்வது பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். முதல் டோஸ் போட்டுக் கொண்டதில் இருந்து 9 மாதங்கள் கழித்து, பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம். ஆனால் உங்கள் விஷயத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு, கோவிட் தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனவே உங்களுக்கு கோவிட் உறுதியான நாள் முதல், 3 மாதங்களுக்கு காத்திருந்து அதன் பிறகு பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளலாம். தொற்று ஏற்பட்டு 3 மாதங்களைக் கடந்துவிட்டீர்கள் என்றால், இப்போது நீங்கள் தாராளமாக பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம்.
அரசு நடைமுறைப்படி, நீங்கள் முதல் இரண்டு டோஸ்களையும் எந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டீர்களோ, மூன்றாவது டோஸாகவும் அதேதான் போடப்படும். முந்தைய இரண்டு டோஸ்களையும் கோவிஷீல்டு எடுத்துக்கொண்டதால் மூன்றாவது டோஸும் அதையே போட்டுக் கொள்வதுதான் சரியானது.
மூன்றாவது டோஸ் போட்டுக்கொள்வதால் உங்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏதும் வர வாய்ப்பில்லை. ஒருவேளை உங்களுக்கு அந்த விஷயத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ, உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்னைகள் இருந்தாலோ, உங்களுடைய குடும்பநல மருத்துவரை ஒருமுறை ஆலோசித்துவிட்டு, அவர் சொல்வதைப் பின்பற்றுங்கள். ஏனெனில் என்னைவிடவும் உங்களுடைய உடல்நலம் தெரிந்த உங்கள் குடும்பநல மருத்துவருக்கு, உங்கள் நிலை நன்றாகத் தெரிந்திருக்கும்.