சென்னை: பென்னாகரம் தேர் விபத்தில் உயிரிழந்த இருவரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மாகே அள்ளி கிராமத்தில் நேற்று நடைபெற்ற தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்; நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர் என்பதையறிந்து வேதனையடைந்தேன்.
பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மாகே அள்ளி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் தேர் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. தேரோட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தேரின் அச்சாணி முறிந்து சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மருத்துவம் பயனின்றி சரவணன், மனோகரன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். காயமுற்ற மற்ற நால்வருக்கும் தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
தேர்த் திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்று பக்தியுடன் வந்த இருவர் தங்களின் இன்னுயிரை இழந்திருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நால்வருக்கும் மிகவும் தரமான மருத்துவம் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தேர் விபத்தில் உயிரிழந்த இருவரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதமும் நிதியுதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.