“‘மங்கையர்க்கரசி’ படத்துல, நான் நடிக்கும்போது, எனக்கு அம்மாவாக நடித்தவர் ‘காக்கா புடிடா… காக்கா புடிடா’ன்னு எப்பவும் சொல்லிட்டே இருப்பார். நான் ஒரு நாள், நிஜக் காக்காவைப் புடிச்சிட்டு வந்து கொடுப்பேன். ‘போடா மடப்பயலே… மகாராஜாவைக் காக்கா புடிடான்னா…. நிஜக் காக்காவைப் புடிச்சிட்டு வந்திருக்கியே’னு திட்டுவாங்க.
இந்தக் காட்சியைப் பார்த்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அன்னிலேர்ந்து என்னை காக்கா ராதாகிருஷ்ணன்னு கூப்பிட ஆரம்பிச்சாரு. பிறகு அதுவே நிலைச்சுப்போச்சு!” என்று சொல்லும் பழம்பெரும் நடிகரான காக்கா ராதாகிருஷ்ணனிடம் அவரது வயதைக் கேட்டால், “உத்தமபுத்திரன்ல (பி.யூ சின்னப்பா நடித்தது) நடிக்கும்போது பத்து வயசு இருக்கும். அந்தப் படம் 1940-ல ரிலீஸ் ஆச்சுன்னு நினைக்கிறேன்…” என்கிறார் தோராயமாக.
சென்னையில், தனது குருநாதர் கலைவாணர் சிலைக்குப் பக்கத்துத் தெருவில் குடியிருக்கும் காக்கா ராதாகிருஷ்ணனின் நினைவுகள்….
“எனக்கு ஐந்து வயசா இருக்கும்போதே அப்பா செத்துப்போயிட்டாரு அவருக்கு ஒரு ஆசை இருந்திருக்கு ‘என் பையனை பயாஸ்கோப்புலதான் சேர்ப்பேன்’னு அவரு சொல்லுவாராம்.
அப்பா இறந்ததுக்குப் பிறகு, சொந்தக்காரரு ஒருத்தர், பையனை டிராமா கம்பெனியில சேர்த்துவிடுறேன்னு சொல்லி, திருச்சிக்கு என்னைக் கூப்பிட்டுப் போனார்.
மதுர ஸ்ரீபாலகான சபாவில சேர்த்துவிட்டாரு. ‘யதார்த்தம்’ டி.பி. பொன்னுசாமி பிள்ளைதான் அதனோட உரிமையாளர். (‘யதார்த்தம்’ன்றது கலைவாணர் வெச்ச பேரு. இப்படித்தான் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பேரு வைப்பாரு கலைவாணர்.
ராமசாமி அண்ணனுக்கு ‘புளிமூட்டை’ ராமசாமினு வெச்சதும் அவருதான்.இந்த சபாவுல இருந்த காலம்தான் வாழ்க்கையின் வசந்தகாலம் மாதிரி இருந்தது. ஒரே கூட்டுக்குள்ள வேற வேற பறவைகள் கூடிவாழ்ற வாழ்க்கை அது. கட்டுப்பாடான வாழ்க்கை. காலைல எழுந்திருக்கணும்…. குளிக்கணும்…. சாமி கும்பிடணும்… பாடம் படிக்கணும். இதுல எது தப்புச்சின்னாலும் ‘ணங்கு’னு மண்டையில விழும். பாடம்கிறது நாடக வசனம்தான்.
பெரிய பெரிய நோட்டுல எழுதி வெச்சிருப்பாங்க. வாங்கிட்டு வந்து படிச்சிட்டு பாடம் பண்ணினதும் போய் அந்த நோட்டைத் திருப்பிக்கொடுத்துட்டு, அடுத்த நோட்டை வாங்கிட்டு வரணும். இப்படிப் பாடம் பண்றதுல எனக்கும் கணேசனுக்கும் (சிவாஜி) எப்பவும் போட்டிதான்.
ஒரு நாடகத்துல, நம்ம வசனத்தை மட்டுமல்ல, எல்லாத்தையுமே மனப்பாடம் செய்துவெச்சிருக்கணும். மேடையில யாராவது டயலாக் விட்டுட்டா, நமக்குத்தான் அடிவிழும். ‘பக்கத்துல நின்னுட்டு இருந்த நீ ஏன் சொல்லித்தரலை?’னு அடிப்பாங்க.
நாடகத்துல நடிக்கிறவங்கள்ல சின்னப் பசங்களைத் தனியாகவும், பெரிய பசங்களைத் தனியாகவும் தங்கவெச்சிருப்பாங்க தனித்தனி வீடு இருக்கும். வயசுக் கோளாறுல பெரிய பசங்க, சின்னவங்களைக் கெடுத்துறக்கூடாதுனுதான் இந்த ஏற்பாடு. இன்னொண்ணு சொல்றேன்… பொம்பளை வேஷம் போட்டாச்சுன்னா, அவன்கிட்ட போய் பேசிக்கிட்டிருக்கக்கூடாது.
‘இல்ல…கிருஷ்ணமூர்த்தி ஏதோ கேட்டான்’னு அவன் பக்கத்துல போய் நின்னா திட்டுவாங்க. ‘இப்ப அவன் கிருஷ்ண மூர்த்தியா?’னு கேட்பாங்க. அந்த அளவுக்கு ஒழுக்கம் இருந்தது.மதுர ஸ்ரீ பாலகானசபா உரிமையாளர் யதார்த்தம் டி.பி. பொன்னுசாமி பிள்ளைனு சொன்னேனே… அவரு, நான் சினிமாவுல நடிச்சு வீடெல்லாம் வாங்கி செட்டில் ஆன பிறகு ஒரு நாள் வந்திருந்தார்.
வீட்டுல, ‘தந்தைக்குப் பின் தனயன்’ படத்துல பெண் வேஷமிட்டு நான் நடிச்ச போட்டோவை பெரிய ப்ரேம் போட்டு மாட்டியிருந்தேன். ‘யாருடா இவ?’னு யதார்த்தம் கேட்டாரு. ‘அடியேனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒண்ணு‘னு சொன்னேன். டக்குனு வாசல் பக்கம் திரும்பி படி இறங்கிட்டாரு. எதுக்குக் கோபப்படுறாருன்னே புரியல. உடனே ஓடிப் போயி, அவரு காருக்கு முன்னால் உட்கார்ந்துட்டேன்.
‘என்னன்னு சொல்லாமப் போகக் கூடாது’ன்னேன். ‘என்னடா நீ… இவ்வளவு பெரிய வீட்டை வாங்கி, அங்க ஒரு குச்சிக்காரி படத்தை மாட்டி வெச்சிருக்கிறே?’ன்னார். ‘இல்லணணே’ன்னு விஜயத்தைச் சொன்னேன். ஆனா, அவரு நம்பல… ‘என்னையே ஏமாத்துறயா?னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அந்தளவுக்குச் சிஷ்யர்கள்மேல குருவுக்கம் ஈடுபாடு இருந்தது.
இந்த சபா வாழ்க்கையிலதான் முதல்முதலா கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனைச் சந்தித்தேன். பேச்சுக்காகச் சொல்லல… நான் மட்டும் பொம்பளையா பொறந்திருந்தா அவரைத்தான் கல்யாணம் பண்ணியிருப்பேன். அந்த அளவுக்கு அவரை ரசித்தேன். அவரு வருத்தப்பட்டு நான் பார்த்ததேயில்ல. ‘எப்பவும் சிரிச்சிக்கிட்டேயிருக்கணும்… எவனாவது அடிக்க வரும்போதும் சிரிச்சா, அடிக்க வர்றவன் அசந்துபோவான்’ என்பார் கலைவாணர்.
இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும்… எங்க சபாவுல இருந்த பையன் ஒருத்தனுக்கு இடுப்பைச் சுற்றிக் கட்டி வந்துவிட்டது. கொஞ்சம் கெட்ட சகவாசம் உள்ள பையன் அவன். அப்பல்லாம் எய்ட்ஸ்ன்ற வார்த்தை கிடையாது. ‘அரையாப்பு‘னு சொல்வாங்க. அந்தப் பையனை கலைவாணர் பார்த்தாரு. ‘டாக்டர்கிட்ட உடனே காட்டணும்’னார். அப்ப அஜந்தா ஓட்டல் பக்கத்துல டாக்டர் சங்கரன் இருந்தாரு. அவருக்கு போன் போட்டார் கலைவாணர்.
‘நம்ம பையன் ஒருத்தனுக்கு உடம்பு சரியில்ல… உங்ககிட்ட அனுப்புறேன்‘னார் கலைவாணர். என்ன நோய்னு அந்த டாக்டா கேட்டாரு. உடனே இவரு, ‘தமிழ்ல்ல பாதி… இங்கிலீஷ்ல பாதி’ன்னார். டாக்டருக்கு புரியல. ‘அதான் டாக்டர்… தமிழ்ல பாதி அரை இங்கிலீஷ்ல பாதிக்கு ஆப்… அரையாப்பு’ன்னார். இப்படி எல்லாத்தையுமே வித்தியாசமா யோசிச்சு தாமாஷா பேசுவார். அவர் கவலைப்பட்டு பார்த்ததில்லை.
யாரையும் அவர் கவலைப்படுத்தியும் பார்த்ததில்லை. எல்லோருக்கும் அள்ளி வழங்கிக்கிட்டே இருப்பதில் சந்தோஷப்பட்டவர் கலைவாணர்.கலைவாணரைப் போலவே, எம்.ஆர். ராதா அண்ணனோடும் நெருங்கிப் பழகினேன்.
கலைவாணர் ஜாலியான ஆள்ன்னா… ராதா அண்ணன், அட்வென்ச்சரான ஆசாமி. ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும்போது, ஒரு பையன் எலெக்ட்ரிக் மெயின்ல கையை வெச்சுட்டான். அது பிடிச்சு இழுத்துக்கிச்சு. எல்லோரும் கத்தறாங்க. ராதா வந்தாரு. வந்ததும் அவனை ஒரு மிதி மிதிச்சாரு தூர விழுந்தான். சுவிட்ச் தெறிச்சு விழுந்துச்சு. இப்படி எதையுமே யோசிக்காம செய்வாரு. ஒரு தடவை, பரமக்குடியில நாடகம் நடந்துட்டு இருந்தது. ரயில்ல முதல் வகுப்புல வந்து இறங்கினார் அவர்.
‘என்ன அண்ணே… முதல் வகுப்புல வர்ற அளவுக்கு காசு வெச்சிருக்கீங்களா?’ன்னு கேட்டேன். ‘எவன் டிக்கெட் எடுத்தான்? இதுதான் காலியா கிடந்தது. ஏறி உட்கார்ந்துட்டேன். டிக்கெட் கேட்க எவனுமே வரலயே’ன்னார். அப்பல்லாம், அவர் அரைக்கால் டவுசர் போட்டு, தொப்பி வைத்துக் கொண்டுதான் எங்கேயும் வருவாரு. யாரோ ரயில்வே அதிகாரின்னு விட்டுட்டாங்க போல.
தூக்குமேடை நாடகம். அதுல, தனக்கு என்ன பேரு வைக்கலாம்னு கேட்டாரு. நல்ல பேரா வையுங்கன்னேன். அப்போது தஞ்சாவூரில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார்னு பேரு. இந்தப் பேரு அண்ணன் ஞாபகத்துக்கு வந்திருக்கிறது. ‘என்னடா பேரு இது…? வடபாதி, தென்பாதின்னு! வடையாம். அதுலயும் பாதியாம்’னார். கொஞ்ச நேரம் யோசித்தார். ‘தென்பாதிமங்கலம் தியாகராஜ முதலியார்’னு வைத்துக்கொண்டார். கெட்ட வார்த்தையை இவரைப் போல யாரும் சரளமாகப் பேச முடியாது. மாமிச வார்த்தை இல்லாம பேசவே மாட்டார். இதனாலயே அண்ணனிடம் பேச நான் யோசிப்பேன். இவரும் அடுத்தவனுக்கு அள்ளி வழங்கறதுல மன்னன்.
இப்பல்லாம் கலைவாணர் மாதிரி, ராதா மாதிரி மனுசங்களையும் பார்க்க முடியலை… சினிமாவும் அப்படி இல்ல… இதைப் பற்றி எல்லாம் யோசிச்சா, எனக்கு அழுகைதான் வருது. ரூமுக்குள்ளே தனியா உட்கார்ந்து அழுது தீர்த்துக்கறேன்.
பழைய ஆளுங்க யாரையும் நான் போய் பார்க்கிறதில்ல. எதையும் எதிர்பார்த்து வர்றானோன்னு நினைக்கிறாங்க. எனக்கு நடிப்பைத் தவிர, எந்தத் தொழிலுமே தெரியாததுனால இதுலயே இருக்கேன். சந்தோஷமாவே இருக்கேன். எப்பவாவது சிவாஜி கணேசனைப் பார்க்கப்போவேன். ரெண்டு பேரும் பழசைப் பேசிக்கிட்டிருப்போம். அவரும் அப்பப்ப இங்க வருவாரு ‘அங்க இருந்தா, நான் தனியா பேசிட்டு இருப்பேன். இங்க இவன் தனியா புலம்பிட்டு இருப்பான். கொஞ்ச நேரம் நாங்க ரெண்டு பேருமா சேர்ந்து பேசுறோம்’னு என் மனைவியிடம் சிவாஜி ஒரு தடவை சொன்னார். அதுபோல, பழசைப் பேசி ரெண்டு பேரும் அழுது ஆத்திக்கறோம்!”
சந்திப்பு: ப. திருமாவேலன்படங்கள். கே. கார்த்திகேயன்