Tenkasi court issues notice to Stalin for malpractices in DMK intra party election: தென்காசி மாவட்ட தி.மு.க உட்கட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோருக்கு ஆலங்குளம் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் தி.மு.க உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக, கல்லூத்து ஊராட்சித் தலைவர் முருகன், ஆலங்குளம் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையும் படியுங்கள்: தமிழ்நாடு, புதுச்சேரிக்கு விமானம் மற்றும் படகு சேவை; இலங்கை ஒப்புதல்
முருகன் தனது மனுவில், தேர்தல் பணியில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். ஜூன் 4-ஆம் தேதி ‘முரசொலி’யில் தி.மு.க தலைமை வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், ஜூன் 6-ஆம் தேதி ஒன்றியச் செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தேன்.
கட்சி விதிமுறைகளின்படி, ஒன்றிய செயலாளரை, குறிப்பிட்ட ஒன்றியத்தின் கிராம பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். கட்சி விதிகளின்படி, தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக தேர்தல் தேதியை கட்சி அறிவிக்க வேண்டும். தேர்தல் நடைபெறும் இடம் மற்றும் வாக்காளர் பட்டியலை, ஏழு நாட்களுக்கு முன் அறிவிக்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றாமல், ஜூன் 9ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என, ஜூன் 4ல், கட்சி அறிவித்தது. மேலும், கட்சி விதிகளை மீறி கீழப்பாவூரில் தேர்தல் நடத்தாமல் தென்காசியில் தேர்தல் நடத்தப்பட்டது என முருகன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோருக்கு ஆலங்குளம் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.