அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியில் அமர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு உள்ளார்.
நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், பல்வேறு அரசு துறைகளில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அண்மையில், மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல துறைகளில் உள்ள மனித வளம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, உயர் மட்டக் குழுவினருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாவது:
ஆய்வை தொடர்ந்து அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை உடனடியாக பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அரசு துறைகளுக்கு இப்படியொரு அறிவுறுத்தலை வழங்கி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அரசுத் துறைகளில் காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், பல்வேறு துறைகளில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.