மதுரை: சமீபகாலமாக தென் மாவட்டங்களில் இளைஞர்கள், மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
பழைய குற்றவாளிகள், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விநியோகித்து தங்களின் கூட்டாளிகளாக மாற்றும் சூழல் உருவானது. போதைப் பொருள் புழக்கத்தால் பல இடங்களில் குற்றங்கள் அதிகரித்தன.
இந்நிலையில் அரசின் உத்தரவால் தென்மண்டலத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை காவல் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் எவ்வித சமரசமும் கூடாது என அதிகாரிகளுக்கு தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அறிவுறுத்தி உள்ளார்.
இதையடுத்து தென்மண்டலத்தில் கஞ்சா வழக்கில் சிக்கிய சுமார் 90-க்கும் மேற் பட்டோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டனர். மதுரை மாவட்டம், ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் ரூ.37 லட்சம் மதிப்பு அசையா சொத்துகள், சேடபட்டி காவல் நிலையத்தில் பதிவான வழக்குகளில் ரூ.59 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள் முடக்கப்பட்டன.
திண்டுக்கல் அருகே பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் ரூ. 1.8 கோடி மதிப்பு அசையா சொத்துகள், தேனி மாவட்டம், மயிலாடும்பாறை. ஓடைப்பட்டி காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளில் ரூ. 23 லட்சம் மதிப்பு அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபடுவோர், அவர்களின் உறவினர் களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னி யாகுமரி ஆகிய மாவட்டங்களில் 494 வழக்குகளில் 813 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
ஓய்வுபெற்ற ஐபிஸ் அதிகாரி கண்ணப்பன் போன்ற அதிகாரிகளும் கஞ்சா ஒழிப்பில் தென் மாவட்ட போலீஸாரின் நடவடிக்கையை பாராட்டியுள்ளனர்.
தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறுகையில், இளைஞர்கள், மாணவர்களை பாழாக்கும் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க தீவிரம் காட்டி வருகிறோம். ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.
சில்லறையாக கஞ்சா விற்பவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும். தீவிர நடவடிக்கையால் சிறிய அளவில் கஞ்சா விற்று வருபவர்களும் மாற்றுத் தொழிலை தேடி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது என்றார்