குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. ஜூலை மாதம் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிற நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறித்துவர் ஒருவரை நிறுத்த வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இதுவரை கிறித்துவ சமூகத்தைச் சார்ந்த எவரும் குடியரசுத் தலைவராக இருந்ததில்லை. இந்திய மக்கள் தொகையில் மூன்றாவது பெரும்பான்மை சமூகமான கிறித்துவ சமூகத்துக்கு சட்டமன்றங்களிலும், நாடாளுமன்ற அவைகளிலும் போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை .
தற்போதைய நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் 5.2% , கிறித்துவர்கள் உள்ளிட்ட பிற சிறுபான்மையினர் 4% மட்டுமே இருக்கின்றனர். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், பட்டியலினத்தவர்கள் முதலானோர் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்திருக்கின்றனர். ஆனால் இதுவரை கிறித்துவ சமூகத்தைச் சேர்ந்த எவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும். கடந்த எட்டாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றிக் கிறித்துவர்களும் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர்.
இந்தியாவின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்றவற்றின் வளர்ச்சிக்குக் கிறித்துவ சமூகம் ஆற்றியிருக்கும் பங்களிப்பு மகத்தானது. இந்திய சுதந்திரத்தின் பவள விழா கொண்டாடப்படவிருக்கும் இந்த நேரத்தில் கிறித்துவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உலகுக்கு உணர்த்துவதாக அமையும்.
பெரும்பான்மைவாத அடிப்படையில் இந்துக்களை ஒருங்கிணைக்க சிறுபான்மையினருக்கெதிரான வெறுப்பு அரசியலையே தமது பிழைப்புக்கான கருவியாகப் பயன்படுத்தும் பா.ஜ.க, குடியரசுத் தலைவர் தேர்தலையும் அதே நோக்கத்தில்தான் பயன்படுத்தும். எனவே, எதிர்க்கட்சிகள் தமது பொது வேட்பாளராகக் கிறித்துவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.