நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2-வது நாளாக நேரில் ஆஜரானார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்றும் ஆஜராக ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கக்கூடிய நிலையில், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ராகுல் காந்தி தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜரானார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் கடந்த 2010-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது தொடர்பாகவும், ஏ.ஜே.எல்.பங்குதாரர்கள் ஒப்புதல் பெறப்படாதது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும் ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலும் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் தொடர்ச்சியாக இன்றும் ராகுல்காந்தியிடம் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். இதனிடையே ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிராக டெல்லி முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் 2-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து காங்கிரஸ் தலைமை அலுவலகம், அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM