விசாகப்பட்டினம்,
பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கட்டாக்கில் நடந்த 2-வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா-சாவா? ஆட்டமாகும். ஏனெனில் இதில் தோற்றால் இந்திய அணி தொடரை இழந்து விடும்.
லோகேஷ் ராகுல் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகியதால் கேப்டன் பொறுப்பை ஏற்ற விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தலைமையில் இந்திய அணி இந்த தொடரில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 211 ரன்கள் குவித்தும் பவுலர்கள் சொதப்பியதால் தோல்வியை சந்தித்தது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. அந்த ஆட்டத்தில் 148 ரன்னில் இந்திய அணியை கட்டுப்படுத்திய தென்ஆப்பிரிக்கா 18.2 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். 29 ரன்னுக்குள் (5.3 ஓவரில்) 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென்ஆப்பிரிக்க அணி பவுமா (35 ரன்கள்), விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென் (81 ரன்கள்), டேவிட் மில்லர் (20 ரன்கள், நாட்-அவுட்) ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் கரைசேர்ந்தது.
பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், ரிஷப் பண்ட், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்ததும், சுழற்பந்து வீச்சாளர்கள் அக்ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல் தங்களது பந்து வீச்சில் அதிக ரன்களை வாரி வழங்கியதும் இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது. வேகப்பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யா தவிர்த்து மற்ற அனைவரும் கச்சிதமாக செயல்பட்டனர். இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.
தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தமட்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கிறது. பேட்டிங்கில் வான்டெர் டஸன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், பவுமாவும், பந்து வீச்சில் ரபடா, நோர்டியா, வெய்ன் பார்னெலும் நல்ல நிலையில் உள்ளனர். கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத குயின்டான் டி காக் களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் 2 ஆட்டங்களில் கண்ட வெற்றி உற்சாகத்துடன் களம் காணும் தென்ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். அதேநேரத்தில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இந்திய அணியினர் வெற்றி கணக்கை தொடங்க எல்லாவகையிலும் தங்களது பலத்தை வெளிப்படுத்துவார்கள். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், அவேஷ்கான், யுஸ்வேந்திர சாஹல்.
தென்ஆப்பிரிக்கா: பவுமா (கேப்டன்), குயின்டான் டி காக் அல்லது ரீஜா ஹென்ரிக்ஸ், பிரிட்டோரியஸ், வான்டெர் டஸன், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், ரபடா, கேஷவ் மகராஜ், நோர்டியா, தப்ரைஸ் ஷம்சி.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.