தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம், வரும் ஜூலை 24-ம் தேதியோடு நிறைவடைவதையொட்டி, ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.க மற்றும் எதிர்க்கட்சிகள் தங்கள் சார்பாக யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து விவாதித்து வருகின்றன. அந்த வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த சனிக்கிழமையன்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி டெல்லியில் நாளை நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸும் பங்கேற்கிறது எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் சார்பாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
மேலும், மம்தாவின் இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தகவல் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய டி.ராஜா, “நாளை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகளும் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதையே இடதுசாரி கட்சிகள் விரும்புகின்றன. நாளை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்” எனக் கூறினார்.
டி.ராஜா இடதுசாரி கட்சிகள் மம்தா கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறியிருக்கும் நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காது என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தகவல் தெரிவித்திருக்கிறார்.