அரச ஊழியர்களுக்கு வாரந்தோரும் வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனினும்,நீர் வழங்கல், சுகாதாரம், மின்சார விநியோகம், கல்வி, பாதுகாப்பு சேவைகள், போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இதில் உள்ளடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
07. பயிர்செய்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக அரச உத்தியோகத்தர்களை வலுப்படுத்தல்
தற்போது நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பயணிகள் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டுள்ளதுடன், அந்நிலைமையால் அரச ஊழியர்களுக்கு தமது போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் தோன்றியுள்ளன. இந்நிலைமையில் வாரத்தில் கடமையாற்றும் ஒரு (01) நாள் அரச விடுமுறையை வழங்கி தொடர்ந்து வரும் காலங்களில் ஏற்படக் கூடுமென எதிர்பார்க்கின்ற உணவுத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக தமது வீட்டுத்தோட்டங்களில் அல்லது வேறு இடங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கான வசதிகளை வழங்குவது உகந்ததெனக் கண்டறியப்பட்டுள்ளது.
நீர் வழங்கல், மின்சார விநியோகம், சுகாதாரம், பாதுகாப்பு சேவைகள், கல்வி, போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களை எதிர்வரும் 03 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் மூடுவதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.